ஜல்லிக்கட்டுப் போட்டி: சீறிப்பாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் ஆர்வம்

0 3195

நடப்பு ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரையை அடுத்த அவனியாபுரத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை, காளையர்கள் அடக்கி பரிசுகளை தட்டிச் சென்றனர். 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் பாரம்பரியமான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. மதுரை அவனியாபுரத்தில் இன்றும், பாலமேட்டில் நாளையும், அலங்காநல்லூரில் நாளை மறுதினமும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் அவனியாபுரத்தில் இன்று காலை 8 மணிக்கு போட்டி தொடங்கியது.உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம், மாநகர காவல் ஆணையர் டேவிட்சர் தேவ ஆசிர்வாதம், மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோரைக் கொண்ட ஜல்லிக்கட்டு குழு போட்டியை தொடங்கி வைத்தது.

போட்டியில் பங்கேற்க 730 வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியர் வினய் தலைமையில் உறுதி மொழி ஏற்றனர். போட்டியில் கலந்து கொள்ள 700 காளைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது.

வீரர்கள் உறுதி மொழி ஏற்றதை தொடர்ந்து காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலை கடந்து சீறிப் பாய்ந்த காளைகளை அடக்க, வீர ர்கள் தங்களின் வீரத்தை வெளிப்படுத்தினர்.

மாட்டுக்கும், மனிதனுக்குமான மல்லுக்கட்டை காண பல்லாயிரம் பேர் திரண்டு இருந்தனர். அவர்கள் எழுப்பிய உற்சாக முழக்கத்திற்கு இடையே காளைகளை வீரர்கள் அடக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சில நேரங்களில் காளைகளை வீரர்களிடம் பிடிபட்டன. சில நேரங்களில் காளையர்களை தூக்கி வீசி காளைகளும் பந்தாடின. சில காளைகள் யாருக்கும் அடங்காமல் களத்தில் நின்று விளையாடின.

மாடுகளை பிடிக்க குழு, குழுவாக வீர ர்களை களத்திற்கு அனுப்பினர். ஒரு குழு ஒரு மணி நேரம் மட்டும் களத்தில் நின்று வீரம் காட்ட அனுமதிக்கப்பட்டது. சிறந்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் பித்தளை அண்டாக்கள், சைக்கிள், குத்துவிளக்கு, வேஷ்டி-துண்டு, தங்க, வெள்ளிகாசுகள் போன்றவை பரிசாக வழங்கப்பட்டன.


ஜல்லிக்கட்டை பலரும் கண்டு களிக்க வசதியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே எல்.இ.டி. டி.வி.க்களும் அமைக்கப்பட்டிருந்தன. காலையில் தொடங்கிய போட்டி மாலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டியின் போது ஒரு கட்டத்தில் மாடுகளை அனுப்புவதில் குளறுபடி ஏற்பட்டதால், மாடு உரிமையாளர்களை கட்டுப்படுத்த போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments