பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிறப்பு பேருந்துகள் மூலம் பயணம்
பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட சென்னையில் இருந்து 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிறப்பு பேருந்துகள் மூலம் சென்றுள்ளனர்.
பொங்கலைக் கொண்டாட ஆயிரக்கணக்கானோர் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் எங்கு பார்த்தாலும் பயணிகள் தலையாகக் காணப்பட்டது. முன்பதிவு செய்திருந்தவர்களின் டிக்கெட்டுகள் பரிசோதித்த பின்னரே அவர்கள் பேருந்தில் ஏற அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை அருகாமையில் உள்ள மாவட்டங்களுக்கு கூடுதல் பேருந்துகளாக, சென்னையின் மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன. இதன் காரணமாக விழுப்புரம், திருவள்ளூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் பயணிகள், வெகு நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படவில்லை.
கோயம்பேட்டிலுள்ள 100 அடி சாலையில் மேம்பாலப்பணிகள் நடைபெற்று வருவதால், அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால் கோயம்பேடு செல்வதற்காக மாநகரப் பேருந்தில் வந்த பயணிகள் பலர் 100 அடி சாலையிலே இறங்கி, அங்கிருந்து நடந்தே பேருந்து நிலையம் சென்றடைந்தனர்.
கோயம்பேட்டிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள், தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து கும்பகோணம் வழியாக தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள், தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் இவற்றுடன் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் என அனைத்தும் பெருங்களத்தூரை கடந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால், அப்பகுதியில் மாலையில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.
இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட போக்குவரத்து போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு, போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே கடந்த 10 ஆம் தேதி முதல் நேற்று நள்ளிரவு 12 மணி வரை அரசு மற்றும் சிறப்பு பேருந்துகள் என நாள் ஒன்றுக்கு 4 ஆயிரத்து 474 பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும், இதன் மூலம் நேற்றிரவு 10 மணி நிலவரப்படி 8 லட்சத்து 47 ஆயிரத்து 837 பயணிகள் பயணித்து இருப்பதாகவும் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments