நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் 'Fastag' முறை இன்று முதல் கட்டாயம்
சுங்கச்சாவடிகளைக் கடந்து செல்லும் வாகனங்களுக்கு பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூலிக்கும் முறை இன்று முதல் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில், கட்டணம் செலுத்துவதற்காக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அத்துடன் சரக்கு வாகனங்களின் போக்குவரத்தும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
இதைத் தவிர்க்கவும் கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பாஸ்டேக் எனப்படும் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
பாஸ்டேக் கட்டண வசூல் முறை ஜன.15-ஆம் தேதியிலிருந்து கட்டாயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று முதல் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பாஸ்டேக் முறை அமலுக்கு வருகிறது.
கடந்த மாதம்15-ஆம் தேதி முதலே அனைத்து சுங்கச்சாவடிகளிலும் ஒரு வழித்தடத்தில் பணப்பரிவர்த்தனை மூலம் சுங்கச்சாவடிகளைக் கடக்க அனுமதி அளிக்கப்பட்டு மற்ற வழித்தடங்களில் பாஸ்டேக் பயன்படுத்தும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.
இதனால், பெரும்பாலானோர் பாஸ்டேக் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில், இன்று முதல் பாஸ்டேக் முறை கட்டாயமாவதால் பெரியளவில் பாதிப்பு இருக்காது என்று கூறப்படுகிறது.
பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் சிக்னல் கோளாறு உள்ளதாகவும், இதற்கு தீர்வு காண வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பாஸ்டேக் விற்பனை செய்யப்படுவதாகவும், மின்னணு முறையில் 52 கோடி ரூபாய்க்கு சுங்கச்சாவடிகளில் பணப்பரிவர்த்தனை நடைபெறுவதாகவும் மத்திய நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.
Comments