SSI வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு.. தேடப்பட்ட இரண்டு பேர் கைது..?
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட 2 பேர், கர்நாடக மாநிலம் உடுப்பியில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து கேரளா செல்லும் அணுகுசாலையில் காவல்துறை சோதனைச் சாவடி ஒன்று உள்ளது.
இங்கு, கடந்த 8ஆம் தேதி இரவு, பணியில் இருந்த களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன், இரண்டு நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவரது உடலில் கத்திக்குத்துக் காயங்களும் இருந்தன. சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகின. தமிழ்நாடு, கேரள மாநிலங்களை உலுக்கிய இந்த வழக்கில், திருவிதாங்கோட்டைச் சேர்ந்த அப்துல் சமீம், நாகர்கோவிலை அடுத்த இடாலகுடி தவ்ஃபீக் ஆகிய இருவரும் தேடப்பட்டு வந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டு, விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த சூழலில், வில்சன் கொலையை அரங்கேற்றியவர்களுக்கு, மும்பையில் இருந்து துப்பாக்கி வாங்கி கொடுத்த இஜாஸ் என்பவன் பெங்களூருவில் நேற்று கைது செய்யப்பட்டான்.
இந்நிலையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு குற்றவாளிகள் எனக் கூறப்படும் அப்துல் சமீமும், தவ்ஃபீக்கும், கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் வைத்து, இன்று கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநில காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் இருவரும், தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Comments