டிரோன்களுக்கு வருகிறது கட்டுப்பாடு..!
ஆளில்லா குட்டி விமானம் எனப்படும் டிரோன்களை வைத்திருப்பவர்கள் அவற்றை வரும் 31 ஆம் தேதிக்கு முன்னர் அரசிடம் பதிவு செய்யாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமானப் போக்குவரத்து அமைச்சகம் எச்சரித்துள்ளது.
பொழுதுபோக்கு, வீடியோ-திரைப்பட பதிவு உள்ளிட்டவற்றுக்கு டிரோன்கள் பெருமளவில் பயன்படுத்தப்படும் நிலையில், அவற்றால் பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அரசு கருதுகிறது.
விமானப் போக்குவரத்து விதிமுறைகளுக்கு மாற்றமாக இயக்கப்படுவதால் அவற்றை ஒழுங்குபடுத்தும் நோக்கில் டிரோன்களை பதிவு செய்வதை கட்டாயமாக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி டிரோன்களை வைத்திருப்பவர்கள் அவை குறித்தும் உரிமையாளர் குறித்தும் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும். அவர்களுக்கு டிரோன்களுக்கான தனித்துவ அடையாள எண், ஆளில்லா விமானம் பறக்கும் உரிமம் ஆகியன வழங்கப்படும்.
இவற்றை விமானப்போக்குவரத்து அமைச்சகத்தின் டிஜிஸ்கை (DigiSky) மென்பொருள் வாயிலாக பெற்று டிரோன்களை இயக்கிக் கொள்ளலாம்.
கடந்த டிசம்பரில் பிரிட்டனின் கேட்விக் (Gatwick) விமான நிலையத்தின் மீது ஏராளமான டிரோன்கள் பறந்தன. அதனால் விமானங்களுக்கு ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டு, விமான நிலையம் 3 நாட்கள் மூடப்பட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்தாயின.
அது போன்ற நிலை ஏற்பாடாமல் இருக்க டிரோன்கள் மீதான கட்டுப்பாடு இறுக்கப்படுகிறது. இந்தியாவில் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரையிலான டிரோன்கள் சட்டவிரோதமாக இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.
புதிய விதிகளின் படி, வரும் 31 ஆம் தேதிக்கு முன்னர் https://digitalsky.dgca.gov.in இணையதளத்தில், உரிமையாளரின் பாஸ்போர்ட் முதல் மற்றும் கடைசி பக்கங்கள் அல்லது ஆதார் அட்டையின் முன், பின் பக்கங்கள், டிரோனின்முன்பாகம், மேல் பாகம் , டிரோன் தயாரிப்பாளர் பதித்த வரிசை எண்ணின் குளோசப் ஆகியவற்றின் தலா 3 HD புகைப்படங்கள், மின்சாரம், கேஸ், மொபைல் அல்லது தொலைபேசி பில் நகல், அல்லது 3 மாதங்களுக்கான வங்கி ஸ்டேட்மென்ட் நகல், உரிமையாளரின் அதிகபட்ச கல்வித் தகுதிச் சான்றிதழ், ஒரு அமைப்பாக இருந்தால் மட்டும் பான் எண் மற்றும் லெட்டர்ஹெட்டில் எழுதப்பட்ட அங்கீகாரம் வழங்கும் கடிதம் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும்.
டிரோனின் புகைப்படங்களுடன் அதன் பருமன், நீளம், அகலம் குறித்த அளவுகளையும் இணைத்தல் அவசியம். பதிவேற்றப்படும் ஒவ்வொரு ஆவணமும் 300 KB க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இந்த அனைத்து ஆவணங்களும் தயார் நிலையில் இருந்தால் 25 நிமிடங்களுக்குள் டிரோன் பதிவு முழுமை அடைந்து விடும். தரவுகளை பதிவு செய்து பின்னர் பதிவேற்றம் செய்யும் வாய்ப்பு இல்லை.
டிரோன்களை பதிவு செய்வது குறித்த சந்தேகங்கள் அல்லது கூடுதல் தகவலுக்கு support-digisky@gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
Comments