குரூப் 4 தேர்வு முறைகேடு புகார்: முதல்கட்ட விசாரணை நிறைவு

0 1554

குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜரானவர்களை மீண்டும் தேர்வு எழுத வைத்து டிஎன்பிஎஸ்சி விசாரணை நடத்தியுள்ளது. முதல் கட்ட விசாரணை நிறைவுற்ற நிலையில், மீண்டும் விசாரணை நடத்த டி.என்.பி.எஸ்.சி திட்டமிட்டுள்ளது.

கடந்த செப்டம்பரில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தின், ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இரு மையங்களில் தேர்வெழுதியவர்களில் 40 பேர், முதல் 100 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்றிருப்பதில் சந்தேகம் எழுவதாக பிற தேர்வர்கள் கூறியிருந்தனர்.

இரண்டு மையங்களிலும் தேர்வு எழுதியவர்களில் பெரும்பாலானோர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் 15 பேர் மாநில அளவில் முதல் 15 இடங்களில் எவ்வாறு தேர்ச்சி பெற்றனர்? என்பது சந்தேகத்தை எழுப்புவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். இந்த புகார் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 வட்டங்களில் 128 தேர்வு மையங்களில் 32 ஆயிரத்து 879 விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு நடைபெற்றது என்றும், இதில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேர்வு செய்யப்பட்ட 57 பேரில் இதர மாவட்டங்களை சேர்ந்தவர்கள் 40 விண்ணப்பதாரர்கள் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது. இந்நிலையில், ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு எழுதியவர்களில் 57 பேருக்கு டி.என்.பி.எஸ்.சி. நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது.

சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வாகாத சிலரையும், விசாரணைக்கு அழைத்திருந்ததாக கூறப்படுகிறது. சம்மன் அனுப்பப்பட்டவர்கள் இன்று காலை,  சென்னை பாரிமுனையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நேரில் ஆஜராகினர். அதில் சிலர் முகத்தை கைக்குட்டையால் மூடியபடி வந்தனர். டி.என்.பி.எஸ்.சி. தலைவர் சுதன், செயலாளர் நந்தகுமார் மற்றும் தேர்வாணைய உறுப்பினர்கள் விசாரணை நடத்தினர்.

சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விசாரணையில், சான்றிதழ்கள், விடைத்தாள்கள், தேர்வுக்கு தயாரான விதம் தொடர்பாகவும், தேர்வு மையமாக ராமநாதபுரம் மாவட்டத்தை தேர்வு செய்தது ஏன்? ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டீர்களா? எத்தனை ஆண்டுகளாக தேர்வுக்கு தயாராகி வருகிறீர்கள்? என்று பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் விசாரணையில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.

மேலும், பொது அறிவு, கணக்கு தொடர்பான தேர்வுகளும் நடத்தப்பட்டுள்ளன. தேர்வறைகளில் சந்தேகத்திற்கிடமாக ஏதேனும் நடைபெற்றதா என, சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வாகாதவர்களிடம் அதிகாரிகள் விசாரித்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் அனைவரிடமும் சுயவிவரக் குறிப்புகளை எழுதி வாங்கிக்கொண்டு மீண்டும் விசாரணைக்கு அழைக்கும் போது கட்டாயம் வரவேண்டும் என்று தேர்வர்களிடம் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் கூறியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணை நிறைவுற்ற நிலையில், தொடர்ந்து விசாரணை நடைபெற உள்ளதாகவும், விசாரணை முழுமைபெற்ற பின்னரே தேர்வில் முறைகேடு ஏதும் நடைபெற்றுள்ளதா? என்பது தெரியவரும் என்றும்  டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments