குடியுரிமை திருத்த சட்டம்: காங்கிரஸ் கூட்டிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை
குடியுரிமை திருத்த சட்டத்தை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் நிலவரம் குறித்தும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிப்பதற்காக காங்கிரஸ் கூட்டிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், திமுக பங்கேற்கவில்லை.
குடியுரிமை சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிப்பதற்காக, காங்கிரஸ் டெல்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை இன்று கூட்டியது.
டெல்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ராகுல்காந்தி, மன்மோகன் சிங், ஏ.கே.ஆண்டனி, குலாம் நபி ஆசாத் ஆகியோர் காங்கிரஸ் சார்பில் பங்கேற்றனர்.
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, ராஷ்ட்ரீய லோக் தள் தலைவர் அஜித் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆனால் வலிமை வாய்ந்த எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. முக்கியமாக திமுக சார்பில் இந்த கூட்டத்தில் யாரும் பங்கேற்கவில்லை. இதேபோல, இடதுசாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தை புறக்கணித்து விட்டார்.
மேற்குவங்கத்தில் இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் போராட்டம் என்ற பெயரில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ஆம் ஆத்மி கட்சி சார்பிலும் யாரும் பங்கேற்கவில்லை. மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கைகோர்த்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ள சிவசேனா கட்சியும் முறைப்படி அழைப்பு வரவில்லை எனக் கூறி கூட்டத்தில் பங்கேற்காமல் தட்டிக்கழித்துவிட்டது.
இதனிடையே, ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுகவை பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். இதனால் ஏற்பட்ட அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக, காங்கிரஸ் கூட்டத்தை திமுக புறக்கணித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
Comments