மும்பையிலிருந்து 4 துப்பாக்கிகள்...! கைதான பயங்கரவாதியின் பகீர் தகவல்

0 1559

பெங்களூருவில் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி இஜாஸ் பாஷா மும்பையில் இருந்து 4 துப்பாக்கிகளை வாங்கி வந்ததாகவும் அதில் ஒன்றைத்தான் களியக்காவிளை எஸ்.எஸ்.ஐ வில்சனை சுடுவதற்கு பயன்படுத்தியதாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்திலும் இந்திய அளவிலும் மிகப்பெரிய அளவில் நாச வேலைகளில் ஈடுபடவிருந்த காஜா மொய்தீன் மற்றும் அவனுடைய கூட்டாளிகளுக்கு உதவியதாக பெங்களூருவைச் சேர்ந்த முகமது அனிபாகான், இம்ரான் கான், முகமது சையது ஆகிய மூன்று நபர்களை தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் கடந்த 7ஆம் தேதி கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து துப்பாக்கிகளும் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டன. அந்த தோட்டாக்களும் களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொல்வதற்கு பயன்படுத்தப்பட்ட தோட்டாக்களும் ஒரே ரகம் என தெரியவந்தது.

இதனையடுத்து போலீசாரின் விசாரணை தீவிரமடைந்தது. இந்த 3 பேரிடமும் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையைக் கொண்டு காஜாமைதீன், சையது அலி நவாஸ், அப்துல் சமத் ஆகிய 3 நபர்கள் டெல்லியில் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூருவில் சிக்கியவர்களிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையின் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை மேலும் ஒருவனை தமிழக கியூ பிரிவு போலீசார் கைது செய்தனர்.

ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இஜாஸ் பாஷா என்ற அந்த நபரை பெங்களூரு கலசப்பாளையம் என்ற இடத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மும்பையில் இருந்து 4 துப்பாக்கிகளை வாங்கி வந்ததும் எஸ்.எஸ்.ஐ வில்சனை சுடுவதற்கு அதில் ஒன்றைத்தான் பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துப்பாக்கி சப்ளை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதால் எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments