எஸ்.எஸ்.ஐ கொலை - கேரளாவில் திட்டம் தீட்டிய கொலையாளிகள்..!
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் கேரளாவில் தங்கி திட்டம் தீட்டியது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
குமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், விசாரணை அதிகாரியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டு விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இந்த சம்பவத்தில் கொலையாளிகளுக்கு உதவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கேரள மாநிலத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு பகுதிகளில் ஏராளமானோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கொலை நடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு குற்றவாளிகள் திருவனந்தபுரம் நெய்யாற்றங்கரை பகுதியில் நடமாடியதாகக் கூறப்படும் வீடியோ போலீசாரிடம் கிடைத்து உள்ளது.
நெய்யாற்றின்கரையில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து திட்டம் தீட்டி அங்கிருந்து ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு களியக்காவிளை வந்து இந்தக் கொலை சம்பவத்தை அவர்கள் அரங்கேற்றி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவ்வாறு சந்தேகிக்கும் அந்த ஆட்டோ ஓட்டுநரைப் பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கொலைக்கு நேரடியாக உதவியதாக சந்தேகிக்கும் இஞ்சிவிளை பகுதியைச் சேர்ந்த செய்யது அலி என்பவரை தேடி வரும் போலீசார், அவரது மனைவி ஊரான “விதுர” பகுதியைச் சேர்ந்த 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலையாளிகளில் ஒருவனாக சந்தேகிக்கப்படும் தவ்பீக் வங்க தேசத்தில் தீவிரவாத பயிற்சி பெற்றவன் என்று கூறப்படும் நிலையில், கள்ள நோட்டு கும்பலும் வெளிநாடுகளில் இருந்து தங்கம் உள்ளிட்டவற்றை கடத்தி வரும் கும்பலும் அவனுக்கு உதவி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பழைய குற்றவாளிகளிடமும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.
Comments