இலங்கை தமிழர்களை CAA-வில் சேர்க்காதது ஒரு விதத்தில் மகிழ்ச்சியே... விக்னேஷ்வரன்

0 1535

இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தில் தமிழகத்தில் அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்களை சேர்க்காததன் மூலம் அவர்களை இலங்கைக்கு திரும்ப அழைத்து கொள்ள ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தமக்கு மகிழ்ச்சி என இலங்கை வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வரான விக்னேஷ்வரன் கூறியுள்ளார்.

பேட்டி ஒன்றின் போது பேசிய அவர்,நான் கூறும் கருத்து உங்களுக்கு வித்தியாசமாக தோன்றலாம். ஆனால் ஈழத்தில் வசிக்கும் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் வேளையில், தமிழகத்தில் அகதிகளாக உள்ள எங்கள் மக்கள் மீண்டும் எங்களிடம் வர வேண்டும். எங்களுடன் வசிக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம் என கூறியுள்ளார்.

கடந்த 35 வருடங்களுக்குள் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழ தமிழர்கள், சூழ்நிலை காரணமாக உலகம் முழுவதும் சென்று வசித்து
வருகிறார்கள். இந்நிலையில் தென்னிந்தியாவில் சுமார் 1 லட்சம் ஈழ தமிழர்கள் உள்ளனர். இவர்களாவது தற்போது தாயகம் திரும்பினால், எங்களுக்கு குறைந்து கொண்டே வரும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து கொள்ள முடியும் என்றார்.

இலங்கை திரும்பினால் இழந்த அவர்களின் வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துக்களை திரும்ப பெற முடியுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், சில இடங்களில் உள்ள சொத்துக்களை நிச்சயம் மீட்டு கொள்ளலாம். வேறு சில பகுதிகளில் உள்ள சொத்துகளை மீட்பது என்பதில் சிக்கல் உள்ளது. ஏனெனில் அவற்றை அரசே கையகப்படுத்தி, வேறு மக்களுக்கு கொடுத்து விட்டது என குறிப்பிட்டார்.

இந்திய மற்றும் இலங்கை அரசுகளின் உதவியுடன் அவர்களின் அடிப்படை உரிமைகளை பெற முடியும் என்னும் நிலையில் தமிழர்கள் இலங்கை திரும்பலாம். ஆனால் தற்போதைய சூழல் அவ்வாறு இல்லாததால் தான் இரட்டை குடியுரிமை கோரிக்கை முன்வைக்கப்படுகிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர் இரட்டை குடியுரிமை தற்போது சட்டத்தின்படி சாத்தியம் இல்லை என்றே கூறப்படுகிறது. இதற்கு காரணம் இந்தியா - இலங்கை இடையே இது தொடர்பாக ஒப்பந்தம் ஏதும் போடப்படவில்லை.

ஈழதமிழர்களை திருப்பி அனுப்புகிறோம் என இந்தியா கூறி, அவர்களை ஏற்க இலங்கை மறுத்தால் அது எங்களுக்கு நன்மையே. எப்படியெனில் இலங்கையில் இது மாதிரியான நடவடிக்கைகள் தான் நடை பெறுகிறது என்று உலக நாடுகளுக்கு வெளிச்சம் போட்டு காட்ட முடியும். ஈழதமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கும் விவகாரத்தில் இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து பேசி செயல்படுத்தலாம் என்ற கருத்தை முன்வைத்தார் விக்னேஷ்வரன்.

மேலும் எங்கள் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கும்பட்சத்தில், எஞ்சி இருக்கும் தமிழர்களின் சொத்துக்கள் மற்றும் நிலங்களையாவது சிங்களவர் வசம் செல்லாமல் தடுத்து நிறுத்த முடியும். இலங்கையில் தமிழர்களுக்கான வாழ்வாதாரம், பாதுகாப்பை உறுதி செய்து விட்டால், நிச்சயம் அகதிகளாக உள்ள பெரும்பாலான ஈழத்தமிழர்கள் தாயகம் திரும்பி விடுவார்கள் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments