இன்பம் தரும் இயற்கை விவசாயம் !

0 4823

இயற்கை விவசாயம் இழப்பை மட்டுமே தரும் என்ற பேச்சுகளைப் பொய்யாக்கி, சரியான திட்டமிடல் இருந்தால் பெருத்த லாபத்தை ஈட்டலாம் என நிரூபித்து வருகிறார் புதுச்சேரியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர்..

புதுச்சேரி எல்லப்பிள்ளைச்சாவடியைச் சேர்ந்த சங்கர் அங்குள்ள தனியார் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஆசிரியர் சங்கருக்கு தமிழகத்தை ஒட்டிய கரிக்கலாம்பாக்கம் பகுதியில் 12 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் “வளம் இயற்கை விவசாயப் பண்ணை” என்ற பெயரில் சுமார் 10 ஏக்கரில் கரும்பும் ஒரு ஏக்கரில் நெல் மற்றுமொரு ஏக்கரில் வாழை, தென்னை, மரவள்ளி என பயிரிட்டு வளர்த்து வருகிறார் சங்கர். நாட்டு மாடுகளை வளர்த்து வரும் அவர், இந்தப் பயிர்களுக்குத் தேவையான இடுபொருட்களை இயற்கையாக அங்கேயே உற்பத்தி செய்துகொள்கிறார்.

தனது நிலத்தில் விளையும் கரும்புகளைக் கொண்டு அங்கேயே வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரையும் தயாரித்து வருகிறார் ஆசிரியர் சங்கர். 800 - 32 என்ற ரக கரும்பை பயிரிடும் அவர், இதில் ஒரு டன்னுக்கு 650 லிட்டர் சாறு கிடைப்பதாகவும் கூறுகிறார்.

கரும்புகளை இயந்திரத்தில் விட்டுப் பிழிந்து சாறெடுத்து, எந்தவித ரசாயனமும் சேர்க்காமல் வெல்லத்தையும் நாட்டுச்சர்க்கரையையும் உற்பத்தி செய்வதாகக் கூறும் சங்கர், “சுவாசம் உழவர் உற்பத்தியாளர் மையம்” என்ற அமைப்பின் மூலம் புதுவை மற்றும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கும் அனுப்புவதாகக் கூறுகிறார்.

இயற்கை விவசாயம் பெரும்பாலும் இழப்பை மட்டுமே தரும் என்ற பொதுவான கருத்தை மறுக்கும் ஆசிரியர் சங்கர், சரியான திட்டமிடலோடும் முழு ஈடுபாட்டோடும் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டால், நாம் எதிர்பார்க்கும் லாபம் கிட்டும் என்கிறார்.

தாம் வளர்த்து வரும் பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் மூலம் நீர்ப் பாய்ச்சி, நீர் மேலாண்மையிலும் சாதித்து வருகிறார் ஆசிரியர் சங்கர். இயற்கை விவசாயம் குறித்த தவறான பரப்புரைகளை நம்பாமல், எதிர்கால சந்ததியையும் மண்ணின் ஆரோக்கியத்தையும் மனதில் வைத்து விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும் என்கிறார் ஆசிரியர் சங்கர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments