சபரிமலை வழக்கு இன்று முதல் விசாரணை..!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய 60 மனுக்கள் மீது, 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று முதல் விசாரணை நடத்துகிறது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் வயது வேறுபாடு இன்றி அனைத்துப் பெண்களும் வழிபாடு நடத்தலாம் என்று கடந்த 2018 ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதேபோல் பார்சி மற்றும் இஸ்லாமிய மதத்திலும் பெண்களுக்கு வழிபாட்டுத் தலங்களில் பாகுபாடு இருப்பதை சுட்டிக்காட்டி, சபரிமலையில் மட்டும் அதற்கு மாறாக தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய இளம் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இதே விவகாரத்தில் பல்வேறு தரப்புகளும் மனு தாக்கல் செய்துள்ளன. இதனைத் தொடர்ந்து சபரிமலை வழக்கு 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
இதற்காக தலைமை நீதிபதி போப்டே தலைமையில் 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு அமைக்கப்பட்டது. இதில் நீதிபதிகள் ஆர். பானுமதி, அசோக் பூஷன், நாகேஸ்வரராவ், மோகன் சாந்த கவுடர், அப்துல் நசீர், சுபாஷ் ரெட்டி, பி.ஆர். கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பழைய அமர்வில் இடம்பெற்று மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய இந்து மல்கோத்ரா, நாரிமன், சந்திர சூட் ஆகியோர் தற்போதைய அமர்வில் இடம்பெறவில்லை. எனவே இந்த 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இன்று முதல் சீராய்வு மனுக்களை விசாரிக்க உள்ளது.
Comments