எஸ்.எஸ்.ஐ கொலை வழக்கு.. தீவிரமாகும் விசாரணை..!

0 1778

ளியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கை விசாரிக்க விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கேரளாவில் மேலும் 8 பேரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

குமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், விசாரணை அதிகாரியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து மதுரை மாவட்ட அமலாக்க பிரிவு கண்காணிப்பாளரான ராஜராஜன், குமரி மாவட்ட கண்காணிப்பாளர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை மேலப்பாளையத்தைச் சேர்ந்த கோழிக்கடை அதிபர் பிஸ்மி நவ்ஷாத் மற்றும் தென்காசி ஹனிபா ஆகியோரிடம் நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவின் குமார் அபினபு தலைமையிலான தனிப்படையினர் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்காசி இந்து முன்னணி பிரமுகர் குமார்பாண்டியன் கொலை வழக்கில் ஹனிபா தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க, கொலையாளிகளுக்கு உதவியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கேரள மாநிலம் தென்மலை பாலருவியில் வைத்து 3 பேரைப் பிடித்து தமிழக கியூ பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே 4 பேர் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஆட்டோவில் வந்து இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றிச் சென்றதாக எழும் சந்தேகத்தை வைத்து, நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே நெய்யாற்றின்கரையில் பதிவான சிசிடிவி காட்சி ஒன்று போலீசார் வசம் கிடைத்துள்ளது. அதில் கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் அப்துல் சமீம், தவுபீக் உருவத்தில் இருவர் நடந்து செல்வது பதிவாகியுள்ளது.

தேடப்படும் இருவரில் தவ்பீக் மேற்கு வங்கத்தில் தீவிரவாத பயிற்சி பெற்றவன் என்றும் கூறப்படுகிறது. இவனுக்கு பல்வேறு தீவிரவாத கும்பல்களுடன் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் கும்பல் இவர்களுக்கு உதவி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments