பொங்கல் பொருட்கள் விற்பனை விறுவிறுப்பு..!

0 1905

மிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் சென்னை கோயம்பேடு சந்தை உள்பட தமிழகம் முழுவதும், கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை கோயம்பேடு சந்தையில், பொங்கல் பண்டிகைக்காக கரும்பு, இஞ்சி மற்றும் மஞ்சள் கொத்துக்கள் வரத்து அதிகரித்துள்ள நிலையில் அவற்றை வாங்க பொது மக்கள் கூட்டம் அலைமோதியது. விவசாயிகள் நேரடியாக, விற்பனை செய்யும் வகையில் 5 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வெளியூர்களில் இருந்து லாரி லாரியாக கரும்பு, மஞ்சள் கொத்துக்கள், இஞ்சி உள்ளிட்ட பொருட்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. பொதுமக்கள், சிறு வியாபாரிகள் அதிகம் கூடுவதால், 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

36 இடங்களில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து வருகிறார்கள். மேலும் அங்காடி நிர்வாகம் சார்பில் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சிறப்பு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரத்தில் காந்தி சாலை, ராஜாஜி சாலை, மற்றும் சந்தை பகுதிகளில் கரும்பு, புத்தாடை உள்ளிட்ட பொருட்களை மக்கள் ஆர்வத்துடன் வந்து வாங்கிச்செல்கின்றனர். நகரில் போக்குவரத்து நெரிசல் நிலவுவதால் கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டு, நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

ராமநாதபுரத்தில் பிரதான கடைவீதியான சாலைதெரு அரண்மனை உள்ளிட்ட பகுதிகளில் பொங்கல் பொருட்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது. புதுப்பானை, பச்சரிசி, வெல்லம், கரும்பு, மஞ்சள் கொத்து, பனங்கிழங்கு, இஞ்சி, பழங்கள் உள்ளிட்ட பொருட்களை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

கோவையில், காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, நூறடி சாலை, டவுன் ஹால், ஒப்பணக்கார வீதி, ராஜ வீதி, ஆர்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் உள்ள ஜவுளிக்கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. புத்தாடைகள், பேன்சி பொருட்கள் மற்றும் நகை போன்றவற்றை வாங்க மக்கள் ஆர்வம் காட்டினர். இதனையொட்டி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், சிசிடிவி கேமரா உதவியுடன் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

கரூரின் மையப் பகுதியான ஜவஹர் பஜாரில், மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு, பொங்கலுக்குத் தேவையான பாத்திரங்கள், வெல்லம், மளிகைப் பொருட்கள் போன்றவற்றை வாங்கிச் சென்றனர். மேலும், புத்தாடை, பேன்ஸி பொருட்களையும் வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments