காஷ்மீரில் அதிரடி என்கவுன்டர்... 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு-காஷ்மீரில், பாதுகாப்புப் படையினரின் அதிரடி என்கவுன்டரில், மூன்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகளோடு, டிஎஸ்பி ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா (Pulwama) மாவட்டத்தில் உள்ள டிரால் (Tral) பகுதியில், தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியை, பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்தபோது, தீவிரவாதிகள், திடீரென துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். பதிலுக்கு, பாதுகாப்புப் படையினர் நடத்திய அதிரடி என்கவுன்டரில், 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களில், உமர் ஃபயாஸ் லோன் (Umar Fayaz Lone), அதில் பஷீர் மிர் (Adil Bashir Mir) ஆகியோர் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஹிஸ்புல் முஜாஹூதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
கொல்லப்பட்டவர்களில் மற்றொருவன், பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி இயக்கத்தைச் சேர்ந்த ஃபய்சான் ஹமீது பட் (Faizan Hameed Bhat) ஆவான்.
இந்நிலையில், சோபியான் (Sophian) மாவட்டத்தில் நேற்று, காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் இணைந்து ரோந்தில் ஈடுபட்டிருந்தபோது, இரண்டு தீவிரவாதிகளும், அவர்களோடு இருந்த டி.எஸ்.பி ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைதான இரண்டு தீவிரவாதிகளும், பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹிஸ்புல் முஜாஹூதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். தேசிய நெடுஞ்சாலையில், டிஎஸ்பி வாகனத்திலேயே, மூன்று பேரும் பயணித்தபோது தான் சிக்கியதாகவும், ஜம்மு-காஷ்மீர் காவல்துறை கூறியிருக்கிறது.
இதற்கிடையே, பூஞ்ச் மண்டலத்திற்கு உட்பட்ட எல்லைப் பகுதியில், 2 தினங்களுக்கு முன்பு, மொஹத் அஸ்லாம், அல்தாஃப் ஹூசைன் ஆகிய பொதுமக்கள் இரண்டு பேர், பாகிஸ்தான் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். இவர்களில், ஒருவரது தலையை துண்டித்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் வெறியாட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக, தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, காஷ்மீரில், தீவிரவாதிகளோடு கைது செய்யப்பட்டிருக்கும் போலீஸ் டிஎஸ்பி தேவிந்தர் சிங், துணிச்சலுக்கான குடியரசு தலைவர் விருதை பெற்றவர் ஆவார். மேலும், ஸ்ரீநகர் விமான நிலைய தீவிரவாத கடத்தல் எதிர்ப்புக் குழுவின் மூத்த அதிகாரியாக பணியாற்றி வந்த நிலையில், தீவிரவாதிகளோடு கைது செய்யப்பட்டிருப்பதாக, காஷ்மீர் ஐஜி விஜய் குமார் தெரிவித்திருக்கிறார்.
தேவிந்தர் சிங்கின் செயல், கொடூர குற்றமாகவே கருதப்படும் என்றும், தீவிரவாதிகள், விசாரணையின்போது எப்படி கையாளப்படுவார்களோ, அதேமுறையில், டிஎஸ்பியும் விசாரிக்கப்படுவார் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இதுநாள் வரையில், எவ்வித குற்ற வழக்குகளுக்கும், ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் ஆளாகாத நிலையில், எப்படி தீவிரவாதிகள் பக்கம் சாய்ந்தார் என்ற புரியாத விடை நோக்கிய விசாரணையைத் தீவிரப்படுத்தியிருப்பதாகவும், காஷ்மீர் ஐஜி விஜய் குமார் தெரிவித்திருக்கிறார்.
Comments