குடியுரிமை சட்ட திருத்தம் யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கானது அல்ல - பிரதமர் மோடி
குடியுரிமை சட்ட திருத்தம் யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்கானது அல்ல என பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் தவறாக வழிநடத்தப்படும் இளைஞர்களுக்கு, சட்ட திருத்தம் குறித்து புரிய வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேற்குவங்க மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக நேற்று சென்ற பிரதமர் மோடி, ஹவுராவிலுள்ள ராமகிருஷ்ண மிஷனின் தலைமையகமான பேலூர் மடத்தில் இரவில் தங்கினார். பின்னர் இன்று காலை மடத்திலுள்ள ராமகிருஷ்ணரின் சிலைக்கு மரியாதை செலுத்திய அவர், சீயர்கள், துறவிகளை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து அங்கு நடைபெற்ற கூட்டு பிரார்த்தனையில் கலந்து கொண்டு மோடி வழிபாடு நடத்தினார்.
பேலூர் மடத்தில் சுவாமி விவேகானந்தரின் பிறந்ததினத்தையொட்டி நடைபெற்ற மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து இளைஞர்களுக்கு எதிர்க்கட்சிகளால் பொய்யான தகவல்கள் அளிக்கப்படுவதாகவும், இதுகுறித்து புரிய வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார்.
குடியுரிமை திருத்த சட்டம் யாருடைய குடியுரிமையை பறிக்கவும் கொண்டு வரப்படவில்லை என்றும், குடியுரிமை கொடுக்கவே அந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் மோடி தெரிவித்தார்.
பாகிஸ்தானில் துன்புறுத்தலுக்கு ஆளான மத சிறுபான்மையினருக்கு இந்தியாவில் குடியுரிமை அளிக்க வேண்டும் என்று மகாத்மா காந்தியும், பிற சுதந்திர போராட்ட தலைவர்களும் தெரிவித்ததாக கூறிய மோடி, குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்ததன்மூலம் மகாத்மா காந்தியின் கனவை மத்திய அரசு நிறைவேற்றியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
குடியுரிமை திருத்த சட்டத்தால், பாகிஸ்தானில் மதசிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்து உலகமே அறிந்து கொண்டு விட்டதாகவும் மோடி தெரிவித்தார்.
பேலூர் மடத்தில் இருந்து புறப்பட்ட மோடி, ஹூக்ளி நதியில் படகில் பயணம் மேற்கொண்டார். இதன்தொடர்ச்சியாக கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற கொல்கத்தா துறைமுக கழக 150ம் ஆண்டு விழாவில் பங்கேற்று, அத்துறைமுக கழகத்துக்கு பாரதிய ஜனசங்க நிறுவனரான சியாமா பிரசாத் முகர்ஜியின் பெயரை அவர் சூட்டினார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்துக்கு மேற்குவங்க அரசு விரைவில் அனுமதியளிக்க இருப்பதாகவும், ஆதலால் மேற்குவங்க மக்களுக்கும் விரைவில் அத்திட்ட பயன் கிடைக்கும் என மோடி தெரிவித்தார்.
விழாவில் கொல்கத்தா துறைமுக கழக ஓய்வூதியதாரர்கள் 2 பேரை மோடி கெளரவித்தார். விழாவில் மேற்குவங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி பங்கு பெறுவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விழாவில் கலந்து கொள்ளாமல் அவர் புறக்கணித்தார்.
Comments