உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் அரசு ஒப்புதல்

0 747

உக்ரைன் நாட்டு பயணிகள் விமானத்தை தவறுதலாக சுட்டு வீழ்த்தி விட்டதாக ஈரான் அரசு ஒப்புக் கொண்டுள்ளது. 176 பேரை பலி கொண்ட அந்த விமான விபத்து குறித்து பல்வேறு யூகங்கள் நிலவி வந்த நிலையில் ஈரான் அதிபர் இதனை தெரிவித்துள்ளார்.

ஈரான் தலைநகர் டெக்ரானில் உள்ள இமாம் கோமெய்னி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த 8-ஆம் தேதி 176 பயணிகளுடன், உக்ரைன் தலைநகர் கீவுக்கு புறப்பட்டு சென்ற போயிங் 737 ரக விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 82 ஈரானியர்கள், 63 கனடா நாட்டைச்சேர்ந்தவர்கள், உக்ரைன் நாட்டைச்சேர்ந்த 11 பேர் என மொத்தம் 176 பேரும் பலியாகினர்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் விபத்து நடந்ததால், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்ற யூகங்கள் எழுந்தன. உக்ரைன் விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உளவுத்தகவல்கள் கிடைத்துள்ளது என்று கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார்.

அதேபோல், அமெரிக்காவும் இதே சந்தேகத்தை வெளிப்படுத்தியது. இதற்கிடையே விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை விமான உற்பத்தியாளரான போயிங் நிறுவனத்திடமோ அல்லது அமெரிக்காவிடமோ வழங்க மாட்டோம் என ஈரான் கூறியது. இது விமான விபத்து தொடர்பான சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது.

இந்த நிலையில், உக்ரைன் விமானம் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் நாட்டின் ராணுவம் தெரிவித்துள்ளது. ராணுவத்தின் அறிக்கையை அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி ஒளிப்பரப்பி உள்ளது. அதில், டெக்ரான் அருகே உள்ள புரட்சிகர படையின் தளத்தின் அருகே உக்ரைன் விமானம் பறந்த தாகவும், அப்போது மனித தவறு காரணமாக வீசப்பட்ட ஏவுகணை தாக்கியதில் விமானம் நொறுங்கி விழுந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த தவறுக்கு வருந்துவதாகவும், இது போன்ற தவறுகள் இனி எதிர் காலத்தில் நிகழாது என்றும், தவறுக்கு காரணமானவர்களுக்கு ராணுவ நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவித் செரிப் தமது டுவிட்டர் பக்கத்தில், இது ஒரு துக்கரமான நாள் என்று கூறியுள்ளார். ஈரான் ராணுவம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மனித தவறு காரணமாக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா மேற்கொண்ட தவறான தாக்குதலை அடுத்த ஏற்பட்ட சிக்கலான சூழலில், மனித தவறு காரணமாக பேரழிவு நிகழ்ந்து விட்டதாகவும், விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், வருத்த த்தையும், தெரிவிப்பதாகவும், மன்னிப்பு கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதே போன்று ஈரான் அதிபர் ஹாசன் ரவுகானியும்,
மனித தவறு காரணமாக விமானம் சூட்டு வீழ்த்தப்பட்டதாக கூறி வருத்தம் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments