ஊர் ஊராக கொள்ளையடித்து நகை கடை நடத்திய கும்பல்
நெல்லையில் 77 சவரன் நகை கொள்ளையடித்த 4 பேர் கொண்ட கும்பலை, 400 கிலோ மீட்டர் பயணம் செய்து 460 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து போலீசார் பிடித்துள்ளனர்.
ஊர் ஊராக சென்று கொள்ளையடித்து நகைக்கடை நடத்தி வந்த கும்பல், தொழில் பெருக குலதெய்வத்தை கும்பிட வந்து சிக்கி உள்ளனர்.
திருநெல்வேலி வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரது வீட்டில், கடந்த டிசம்பர் மாதம் 77 சவரன் தங்க நகை கொள்ளை போனது. கைரேகை உள்ளிட்ட எந்த தடயமும் சிக்காத நிலையில், அப்பகுதி சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ததில் போலி நம்பர் பிளேட்டுடன் ஒரு கார் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து சுங்கச்சாவடிகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் என 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள 460 சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த போலீசார், அந்தக் கார் சென்ற திசையை கண்டுபிடித்தனர்.
இதில் 100 கிலோ மீட்டர் சென்றதும், போலி நம்பர்பிளேட் கார் மாயமாகி, பின்னர் வேறொரு நம்பர் பிளேட்டுடன் செல்வது தெரிய வந்தது. அதன்பிறகு 3 வது முறையாகவும் அந்த கார் நம்பர் பிளேட் மாற்றப்பட்டு திருப்பூரில் காணாமல் போகிறது. தொடர்ந்து திருப்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் சிசிடிவி காட்சியில் 4 பேர் காரிலிருந்து இறங்குவது பதிவாகி இருந்தது.
அதில் உள்ள உருவத்தை வைத்து அடையாளம் கண்ட நெல்லை போலீசார், திருப்பூரில் வைத்து குருவி சக்தி, ராமஜெயம், முகமது ரபீக், யாசர் அராபத் ஆகிய 4 பேரை கொத்தாக பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில் சொகுசு காரில் வலம் வந்து, பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டவர்கள் என்றும், 50 க்கும் மேற்பட்ட ஊர்களில் கொள்ளையடித்து திருப்பூரில் மங்களம் நகைக்கடை என்ற பெயரில் கடை நடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இந்நிலையில் வியாபாரம் பெருக குலதெய்வத்தைக் கும்பிட கூட்டாளிகளுடன் நெல்லை வந்த குருவி சக்தி, தமிழ்ச்செல்வன் வீட்டில் கைவரிசை காட்டியதை அடுத்து போலீசில் சிக்கிக் கொண்டார்.
Comments