தங்க கட்டிகளை திருடிய ஈரானிய கொள்ளையர்கள்...

0 1374

சென்னையில் ஆந்திர தொழிலதிபரின் கார் ஓட்டுநரிடம் இருந்து  1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டியை  திருடிச் சென்ற ஈரானிய கொள்ளையர்கள் 4 பேரை  போலீஸார் தேடி வருகின்றனர். 

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் கமலேஷ் குமார் என்பவருக்காக அவரிடம் வேலைபார்க்கும் கவுஸ் முகமது, கார் டிரைவர் தினேஷ்குமார் ஆகியோர் சென்னை சவுகார்பேட்டையிலுள்ள அம்பிகா டிரேடர்ஸ் கடையில் தங்க கட்டியை நேற்று மாலை வாங்கினர். 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் 4.3 கிலோ எடை கொண்ட தங்க கட்டியை பையில் வாங்கி வைத்துக் கொண்டு, வீரபத்திர தெரு பகுதியாக நடந்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர், தங்களை டெல்லி போலீஸார் என இரண்டு பேரிடமும் அறிமுகப்படுத்தியுள்ளனர். பின்னர் தினேஷ்குமார் வைத்திருந்த பையில் துப்பாக்கி இருப்பதாக ரகசியத் தகவல் கிடைத்திருப்பதாகவும், ஆதலால் அதில் சோதனை நடத்த வேண்டுமெனவும் கூறியுள்ளனர்.

இதை நம்பி பையை அளித்ததால், அதில் சோதனை நடத்தியுள்ளனர். பிறகு பையில் துப்பாக்கி இல்லை எனத் தெரிவித்து, தினேஷ்குமாரிடம் ஒப்படைத்து விட்டு, மோட்டார் சைக்கிள்களில் ஏறி சென்று விட்டனர்.

இதையடுத்து பையை தினேஷ்குமார் பரிசோதித்தபோது, அதிலிருந்த தங்கக் கட்டியை காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த கட்டியை 4 பேரும் நைசாக திருடிச் சென்றதை புரிந்து கொண்டார்.

இதையடுத்து யானைக்கவுனி காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இதன்பேரில் சிசிடிவி கேமரா காட்சியை கைப்பற்றி சோதனை நடத்தியதில், 4 பேரும் ஈரானிய கொள்ளையர்கள் என்பதும் அப்பகுதியில் இதேபோல் பலரிடம் கைவரிசை காட்டியதையும் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து சிசிடிவி காட்சியை அடிப்படையாகக் கொண்டு, ஈரானிய கொள்ளையர்கள் 4 பேரையும் யானைக்கவுனி போலீஸார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments