கல..கல..கலாட்டா...காங்கிரஸ் பொங்கல்...!
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பங்கேற்ற பொங்கல் விழாவில், இலவசமாக கரும்பும் எவர்சில்வர் பானையும் தருவதாக ஆசைவார்த்தை கூறி அழைத்து வரப்பட்ட பெண்களுக்கு, பொருட்கள் ஏதும் வழங்கப்படாததால் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர்.
காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மகிளா காங்கிரஸ் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
விழாவுக்கு கூட்டத்தை கூட்ட அனைவருக்கும் எவர்சில்வர் பானையும், கரும்பு மற்றும் அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக 10 கரும்புக் கட்டுகள் அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்தன.
இதனை நம்பி சில நிர்வாகிகள் தங்கள் பகுதி பெண்களை கூட்டத்துக்கு அழைத்து வந்திருந்தனர். கூட்டத்தில் 20 பெண்களுக்கு மட்டுமே சில்வர் பானையும் கரும்புகளும் வழங்கப்பட்டன. கே.எஸ் அழகிரி முன்னிலையில் அதனை கொண்டு வந்து அவரிடம் கொடுத்து அவர்களே பெற்று சென்றனர் முக்கிய பெண் நிர்வாகிகள் மாலையை கொண்டு வந்து அழகிரியிடம் கொடுக்க அவர் பெண் நிர்வாகிகளுக்கு கழுத்தில் மலையை அணிவித்தார்.
சில்வர் பானை தான் சிக்கவில்லை, கரும்பாவது கையில் கிடைக்கும் என்று காத்திருந்த 200 ரூபாய் தியாகிகளுக்கு கடைசிவரை பொங்கல் பொருட்கள் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் அவர்கள் தங்களை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தவர்களை முற்றுகையிட்டனர்
சிலர் எவ்வளவு தான் எம்பி எம்பி குதித்தாலும் கரும்பு அல்ல, பொடிக்கு புகையிலை கூட இங்கு சிக்காது என்று உணர்ந்து புலம்பியபடியே இடத்தை காலி செய்தனர்
முன்னதாக சந்தியமூர்த்திபவன் வளாகத்தில் பொங்கல் வைத்த காங்கிரஸ் மூத்த பெண் தொண்டர்கள் வளைந்து நெளிந்து நாட்டிய பேரொளி போல கலகலப்பாக நடனமாடி மகிழ்ந்தனர்.
கடந்த காலங்களில் காங்கிரஸ் அலுவலகத்தில் வழக்கமாக நடக்கின்ற கோஷ்டி மோதல்கள் இன்றி ஆனந்தமாக கலாட்டா பொங்கல் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Comments