ஒன்றியத் தலைவர் தேர்தல் 27 இடங்களில் ஒத்திவைப்பு
மாவட்ட ஊராட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் ஒரு இடத்திலும், ஊராட்சி ஒன்றியங்களில் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் 27 இடங்களிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நிறைவடைந்த நிலையில், மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவர் உள்ளிட்ட 5 பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. 13 இடங்களிலும், தி.மு.க. 12 இடங்களிலும், பா.ம.க. ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. சிவகங்கை மாவட்ட ஊராட்சியில் போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வருகையின்மையால் மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
ஊராட்சி ஒன்றியங்களில் சட்டம்-ஒழுங்குப் பிரச்னை காரணமாக 12 இடங்களிலும், போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் வருகையின்மை காரணமாக 13 இடங்களிலும், தேர்தல் நடத்தும் அலுவலரின் உடல்நலக்குறைவு காரணமாக 2 இடங்களிலுமாக மொத்தம் 27 ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
287 ஊராட்சி ஒன்றியங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க.விற்கு 140 இடங்களும், தி.மு.க.வுக்கு 125 இடங்களும் கிடைத்துள்ளன. பாம.க. 7 இடங்களிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும், பாஜ.க. 3 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 3 இடங்களிலும், அ.ம.மு.க. மற்றும் சுயேட்சைகள் தலா 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.இதேபோன்று மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல்களும் நேற்று நடைபெற்றன.
கடலூர், திருவண்ணாமலை, மணப்பாறை, சிவகங்கை, பரமத்தி வேலூர், திருப்புவனம், கோவில்பட்டி உள்ளிட்ட சில ஊராட்சி ஒன்றியங்களில் மறைமுகத் தேர்தல் நடைபெறவில்லை.ஒத்திவைக்கப்பட்ட இடங்களில் வேறொரு தேதியில் தேர்தல் நடத்தப்பட உள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. (GFX out
இதனிடையே, விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் டிஎஸ்பி வெங்கடேசனை, மர்மநபர்கள் அரிவாளால் வெட்டியதில் அவர் காயமடைந்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஒன்றிய அலுவலகத்தில் மறைமுக தேர்தலுக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களை மர்ம நபர்கள் திடீரென அரிவாளால் தாக்க முயன்றனர்.
அப்போது அங்கிருந்த நாற்காலிகளை கொண்டு அவர்களை தடுக்க முயன்ற போது, வெங்கடேசனுக்கு கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பான குற்றவாளிகள் 2 பேர் பிடிபட்ட நிலையில், தலைமறைவாகி உள்ள 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Comments