வாட்ஸ் அப்பில் தர்பார் முழுபடமும் வெளியீடு..! சமூக விரோதிகள் மீது புகார்

0 2072

ரஜினியின் தர்பார் திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டாம் என்றும், இணையத்தில் பார்த்து படத்தை அடித்து காலி செய்ய வேண்டும் என்றும் வாட்ஸ் ஆப் வாயிலாக தர்பார் முழு படத்தையும் பகிர்ந்துவரும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ரஜினி நடிப்பில், லைக்கா தயாரிப்பில் வெளியாகி உள்ள தர்பார் திரைபடம் வெளியான முதல் நாளிலேயே உலக அளவில் 100 கோடிகளை தாண்டி வசூல் சாதனை படைத்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தர்பார் படத்தின் வசூலை அடித்து நொறுக்கும் நோக்கில் அந்த படம் முழுவதையும் இணையத்தில் பதிவேற்றியுள்ள சமூக விரோத கும்பல் ஒன்று, அதனை மூன்று பாகங்களாக பிரித்து வாட்ஸ் அப் வாயிலாக பல்வேறு குழுக்களுக்கு அனுப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பல கோடி ரூபாய் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட தர்பார் படத்தின் வெற்றியை தடுக்கும் தீய எண்ணத்தில், திரையரங்கிற்கு சென்று பார்க்க வேண்டாம் என்று சமூக விரோதிகள் சிலர் இதனை செய்து வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, சமூக வலைதளங்களில் தர்பார் படத்தை வெளியிட்டவர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் லைக்கா நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

புதிய படம் வெளியான அன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாவது, போலீசாரால் தடுக்க முடியாத நிகழ்வாக மாறிப்போய்விட்ட நிலையில் தர்பார் திரைப்படமும் வெளியான அன்றே இணையத்தில் வெளியானது. தற்போது ஒரு படி மேலே போய், திரையரங்கிற்கு சென்று யாரும் படம் பார்க்க வேண்டாம் என்ற குரல் பதிவோடு, முழுபடத்தையும் வாட்ஸ் ஆப்பில் பரப்பி வருவது திரைஉலகை அழிக்கும் செயல் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள்தான் தர்பார் திரைபடத்தின் வெற்றியை பொறுத்துக் கொள்ள இயலாமல் இது போன்ற கீழ்தரமான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக ரஜினி மக்கள் மன்றத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தொடர்ச்சியாக ஒரு வாரம் விடுமுறை உள்ள நிலையில் தர்பார் இன்னும் பல மடங்கு வசூலை வாரிகுவிக்கும் என்று எதிர்பார்க்கபடுவதால் ரஜினியின் வெற்றி மீது பொறாமை கொண்ட சிலர் இந்த செயலை செய்து வருவதாக திரை உலகினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது போன்ற சமூக விரோத செயல்கள் தடுக்கப்படாவிட்டால், வரும் காலங்களில் தமிழ் திரை உலகம் மெல்ல அழிவின் விழிப்பிற்கு சென்று திரையரங்குகளில் படம் வெளியாவதே கேள்விகுறியாகும் என்பதே கசப்பான உண்மை..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments