இந்திய அதிகாரிகளை அவமரியாதையாக அழைத்த போயிங் ஊழியர்கள்
கடந்த 2017 ஆம் ஆண்டு, போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை வாங்கும் போது, இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகளை,போயிங் நிறுவன ஊழியர்கள் அவமரியாதையாக பேசிய விவரம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2018 ஆம் ஆண்டு அக்டோபர் 29 ஆம் தேதி மற்றும் கடந்த ஆண்டு மார்ச் 10 ஆம் தேதி நடந்த 737 மேக்ஸ் விமான விபத்துக்களில் 346 பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து போயிங்கின் 737 மேக்ஸ் ரக விமானங்கள் உலகெங்கிலும் முடக்கி வைக்கப்பட்டுளன.
இந்த விபத்துக்கள் குறித்து அமெரிக்க காங்கிரஸ் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து நிர்வாகத்தினர் விசாரணை நடத்துகின்றனர். அதற்காக போயிங் நிறுவனம் தாக்கல் செய்த உரையாடல் பதிவுகளில், இந்திய அதிகாரிகளை முட்டாள்கள் என்றும், அறிவீனர்கள் என்றும் அதன் 2 ஊழியர்கள் அழைத்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மட்டுமே பதின்மூன்று 737 மேக்ஸ் ரக விமானங்களை வாங்கியது. அவையும் இந்த 2 விபத்துக்குப் பிறகு முடக்கப்பட்டுள்ளன.
737மேக்ஸ் விமான கொள்முதல் நேரத்தில் அது குறித்து இந்திய விமானிகளுக்கு சிமுலேட்டர் பயிற்சி அளிக்க வேண்டும் என விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வலியுறுத்தியதே போயிங் ஊழியர்கள் வசை பாட காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து மன்னிப்பு கேட்டுள்ள போயிங் நிறுவனம் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது.
Comments