ஒன்றிய தலைவர் தேர்தல்.. அரிவாள் வெட்டு - தீக்குளிப்பு முயற்சி

0 1868

ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தலின்போது தீக்குளிப்பு முயற்சி, அரிவாள் வெட்டு, மோதல் - தடியடி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றன.

மதுரை:

மதுரை மேற்கு ஒன்றியத்தில் அதிமுக கவுன்சிலர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 5 வது வார்டு அதிமுக கவுன்சிலரான செல்லபாண்டியன், தேர்தலுக்கு சற்று நேரத்துக்கு முன்பு ஒன்றிய அலுவலகத்திற்கு மண்ணெண்ணை கேனுடன் வந்தார். 12 வது வார்டு அதிமுக கவுன்சிலர் செந்தில்குமார் கடத்தப்பட்டதால் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கூறியவாறு உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முன்றார். உடனே அங்கிருந்த போலீசார் அவரது உடலில் தண்ணீரை ஊற்றி மீட்டு அழைத்துச்சென்றனர்.

மதுரை மேற்கு ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 11 கவுன்சிலர்களில், திமுகவின் பலம் 8 ஆக உள்ளதால் அக்கட்சியைச்சேர்ந்த வீரராகவன் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றிய தலைவர் தேர்தலின் போது ஏற்பட்ட மோதலில் போலீஸ் துணை சூப்பிரண்டுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இங்கு 14 கவுன்சிலர்களில் அதிமுக மற்றும் திமுக வின் பலம் சம அளவில் இருப்பதால் குலுக்கல் முறையில் தலைவரை தேர்வு செய்ய அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலில் ஈடுபட்டனர். அப்போது சிலர் ஒன்றிய அலுவலகத்தில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

தகவல் கிடைத்ததும் அருப்புக்கோட்டை டிஎஸ்பி வெங்கடேஷ் தலைமையில் போலீசார் சென்று அமைதிப்படுத்த முயன்றனர். இந்நிலையில் வெளியில் இருந்து வந்த சிலர் சரமாரியாக கல்வீசில் ஈடுபட்டனர். இதை தடுக்க முயன்ற போது டிஎஸ்பி வெங்கடேஷை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதையடுத்து கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு அங்கிருந்தவர்களை வெளியேற்றி ஒன்றிய அலுவலகத்தை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

இதற்கிடையே டிஎஸ்பி யை வெட்டியதாக இருவரை கைது செய்துள்ளனர். மேலும் சிசிடிவி காட்சியை வைத்து மோதலில் ஈடுபட்டவர்களை தேடிவருகின்றனர். இந்த மோதலால் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காயம் அடைந்த டிஎஸ்பி அருப்புக்கோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் ஏற்பட்ட மோதலில் ஒன்றிய அலுவலகம் சூறையாடப்பட்டது. அப்போது, செய்தியாளர் ஒருவரும், போலீசாரும் தாக்கப்பட்டனர். இந்த ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 13 கவுன்சிலர்களில் அதிமுக, திமுகவுக்கு தலா 6 கவுன்சிலர்கள் என சமமாக உள்ளது. ஒருவர் சுயேட்சை ஆவார். இன்று தலைவர் தேர்தலின் போது சுயேட்சை ஆதரவுடன், திமுக வைச்சேர்ந்த கண்ணன் 7 வாக்குகள் பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முடிவு அறிவிக்க இருந்த நேரத்தில், அதிமுக கவுன்சிலர்கள் அதை ஏற்க மறுத்தனர். முடிவு அறிவிப்பை நிறுத்தி வைத்து, மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனை அதிகாரிகள் ஏற்க மறுத்ததால் அதிமுக கவுன்சிலர்கள் அலுவலகத்தில் இருந்த மேஜை, நாற்காலி, கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றை தூக்கி வீசி, அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர்.

இதைத்தடுக்க முயன்ற போலீசார் சிலர் தாக்கப்பட்டதுடன், செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளர் கார்த்திக்கும் தாக்கப்பட்டார். தகவல் அறிந்து கூடுதல் போலீசார் விரைந்து வந்து அலுவலகத்தில் இருந்த கவுன்சிலர்கள், அதிகாரிகளை வெளியேற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த மோதலால் முடிவு அறிவிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் திமுக வெற்றிபெற்றதாக அறிவித்ததால், ரகளை ஏற்பட்டதுடன் அதிமுக கவுன்சிலர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கலசப்பாக்கம் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 21 இடங்களில் திமுகவின் பலம் 9 ஆகவும், அதிமுகவின் பலம் 8 ஆகவும் உள்ளது. மேலும் பா.ம.க, மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தலா 2 இடங்களில் வெற்றி பெற்று இருந்தனர்.

இந்நிலையில் தலைவர் தேர்தலில், 13 வாக்குகள் பெற்று, திமுகவைச் சேர்ந்த அன்பரசி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் அதிகாரிகள் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், திமுக மற்றும் அதிமுகவினர் நாற்காலிகளை வீசி ரகளையில் ஈடுபட்டனர்.

பின்னர் அதிமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் சாலை மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments