மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல்: அதிமுக 14, திமுக 12 இடங்களில் வெற்றி
தமிழகத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள், ஒன்றிய தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்தலில் 14 இடங்களை அதிமுக கைப்பற்றி உள்ளது. 12 இடங்களில் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கடந்த 6-ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் ஆகிய 5 பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களையும், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர்களையும், 9624 கிராம ஊராட்சி துணை தலைவர்களையும் தேர்வு செய்ய மறைமுக தேர்தல் நடைபெற்றது.
இதில்மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் அதிமுக 14 இடங்களிலும், திமுக 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தலை ரத்துசெய்து மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவிட்டு உள்ளார். சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி, தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இதே போன்று ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் அதிமுக 150 இடங்களையும், திமுக 135 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
இதே போன்று ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் அதிமுக 125 இடங்களையும், திமுக 124 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆகிய 2 இடங்களை அமமுக கைப்பற்றி உள்ளது. சுயேட்சையாக போட்டியிட்டவர்கள் 20 இடங்களில் வென்றுள்ளனர். மீதமுள்ள 39 இடங்களில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Comments