உக்ரைன் விமானத்தை தங்கள் ராணுவம் தவறுதலாக சுட்டு வீழ்த்தி விட்டதாக ஈரான் ஒப்புதல்
176 பேர் உயிரிந்த உக்ரேன் விமான விபத்தில் புதிய திருப்புமுனையாக, விமானத்தை தற்செயலாக சுட்டு வீழ்த்தி விட்டதாக கூறி, ஈரான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரான் தளபதி காஸிம் சுலைமானி கொல்லப்பட்டதன் எதிரொலியாக, கடந்த 8 ஆம் தேதி, ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அதற்கு சில மணி நேரங்கள் கழித்து, டெஹ்ரானில் இருந்து கிவ் நகருக்கு புறப்பட்ட உக்ரேன் நாட்டு விமானம், வானில் உயர்ந்த சில நொடிகளில் கீழே விழுந்து நொறுங்கியது.
இதில் விமானத்தில் இருந்த 167 பயணிகள், 9 பணியாளர்கள் உள்பட அனைவரும் உயிரிழந்தனர். விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என அறிவித்த ஈரான் அரசு, விமானத்தின் கறுப்புப் பெட்டியை போயிங் நிறுவனத்திடம் அளிக்க முடியாது என்றும் கூறியது. ஆனால் ஈரான் தான் ஏவுகணை மூலம் விமானத்தை தாக்கி வீழ்த்தியதாக, அமெரிக்கா,கனடா உள்ளிட்ட நாடுகள் குற்றஞ்சாட்டின.
இந்த நிலையில் உக்ரேன் விமானத்தை தற்செயலாக சுட்டு வீழ்த்தி விட்டதாக ஈரான் இன்று ஒப்புக் கொண்டுள்ளது. தனிநபர் செய்த தவறே இதற்கு காரணம் எனவும் ஈரான் விளக்கம் அளித்துள்ளது.
Comments