27 மாவட்டங்களில் இன்று மறைமுகத் தேர்தல்...
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றியத் தலைவர்களைத் தேர்வு செய்ய இன்று மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் கடந்த 6-ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஒன்றிய தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் ஆகிய 5 பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது.
27 மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களையும், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத்தலைவர்களையும், 9624 கிராம ஊராட்சி துணை தலைவர்களையும் தேர்வு செய்ய மறைமுக தேர்தல் நடக்கிறது.
மாவட்ட தலைவர், ஒன்றிய தலைவர் பதவிக்கு இன்று காலை 11 மணிக்கும், மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தல் மதியம் 3.30 மணி அளவிலும் நடைபெற உள்ளது.
ஏற்கனவே வெற்றி பெற்று பதவி ஏற்றுள்ள உறுப்பினர்கள் மட்டுமே இந்த தேர்தலில் வாக்களிக்க முடியும். மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் தேர்தலை அந்தந்த மாவட்ட திட்ட அதிகாரிகள் தலைமையில் இரண்டு அதிகாரிகள் கொண்ட குழு நடத்தும். ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் தேர்தலை மாவட்ட வளர்ச்சி அதிகாரி தலைமையிலான குழு நடத்தும்.
தேர்தலில் போட்டியிட விரும்புவோர், தங்களது பெயர்களை அதிகாரிகள் குழுவிடம் பதிவு செய்ய வேண்டும்.அவர்களின் பெயர்களை அச்சிடப்பட்ட வாக்குச்சீட்டில் அதிகாரிகள் அகர வரிசைப்படி எழுதிக் கொள்வார்கள். அந்த வாக்குச்சீட்டுகள் வாக்களிக்க தகுதி பெற்றவர்களுக்கு கொடுக்கப்படும். அதனை பெற்றுக் கொண்ட உறுப்பினர்கள், தங்களுக்கு விருப்பமானமானவரின் பெயருக்கு நேராக பேனா மூலம் தேர்வு குறியிட வேண்டும்.
பின்னர் வாக்குச்சீட்டை வாக்குப் பெட்டியில் போட வேண்டும். உறுப்பினர்கள் அனைவரும் வாக்களித்த பின்னர், வாக்குப்பெட்டியை திறந்து எண்ணி, யார் வெற்றி பெற்றார்கள் என்பது அறிவிக்கப்படும்.
Comments