குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமல்...
குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டது.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி, 2014, டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு குடியுரிமை அளிக்க முடிவு செய்யப்பட்டது.
டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து சட்டத் திருத்தத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
இதனை எதிர்த்து 59 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குடியுரிமை திருத்தச் சட்ட அமலுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அரசமைப்புச் சட்டப்படி செல்லுமா என ஆராய முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் முறைப்படி அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ள முஸ்லிம் அல்லாத பிற மதத்தினர் இந்தியக் குடியுரிமை பெறலாம் என்றும், ஜனவரி 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெற மாட்டோம் என்றும், ஓர் அங்குலம் கூட பின்வாங்க மாட்டோம் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Comments