சுட்டுக் கொல்லப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் கொலையில் திடுக்கிடும் தகவல்...
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை சுட்டுக் கொன்றவர்கள் கேரளாவுக்கு தப்பி ஓடியிருப்பதால், கியு பிரிவு தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
களியக்காவிளை அருகே புதன்கிழமை இரவு சோதனைச்சாவடியில் பணியிலிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரை கொன்று விட்டு கேரளா நோக்கி காரில் தப்பி ஓடிய 2 பேரும் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் ஷமீம், நாகர்கோவில் இளங்கடையை சேர்ந்த தவுபீக் என்பதை தமிழக காவல்துறை சிசிடிவி உதவியுடன் கண்டுபிடித்தது. 2 பேரும், என்ஐஏ அமைப்பால் ஏற்கெனவே தேடப்பட்டு வந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து கெலையாளிகள் 2 பேரின் உறவினர்கள், நண்பர்கள் என 9 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே கொலை செய்ய அவர்களுக்கு உதவியதாக கூறப்படும் தமிழகத்தை சேர்ந்த 2 பேரை பிடித்து கேரள மாநிலம் பாலக்காடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், திருவனந்தபுரத்திலுள்ள வளியதுறை பகுதியிலும் ஒருவரை சந்தேகத்தின்பேரில் அந்நகர போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
3 பேரிடம் நடக்கும் விசாரணை குறித்த தகவல் தெரியவந்ததும், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு தமிழக க்யூ பிரிவு போலீஸார் விரைந்தனர். அவர்கள் கேரளாவில் முகாமிட்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், இந்து முன்னணி, பாஜக சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. அதில் பங்கேற்றவர்கள் வில்சன் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
வில்சனை சுட்டு கொன்ற பயங்கரவாதிகளில் ஒருவன் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தன்னை கத்தியால் கொலை செய்ய முயன்றதாக பாஜக மாநில துணை தலைவர் எம் ஆர் காந்தி தெரிவித்தார்.
இந்நிலையில், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வில்சனின் உடலை பிரேத பரிசோதனை செய்த 7 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு அறிக்கை அளித்துள்ளது.
அதில் வில்சனின் முதுகு, வலதுகை விரல், இடதுகை விரல், வலது கால் ஆகிய 4 இடங்களில் கத்தியால் வெட்டப்பட்ட காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வில்சனின் கழுத்து, நெஞ்சு பகுதியில் 2 தோட்டாக்கள் பாய்ந்து வெளியேறி இருப்பதாகவும், தொடையில் இருந்த இன்னொரு தோட்டா அகற்றப்பட்டு இருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Comments