பயணிகள் விமானம் ஏவுகணை தாக்குதலில் வீழ்த்தப்பட்டதா?

0 1671

ஈரானில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியதில் மர்மம் நீடித்து வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய ஏவுகணை கொண்டு விமானத்தை ஈரான் தாக்கியதா என்ற விசாரணை சூடுபிடித்துள்ளது. 

உக்ரைன் நாட்டை சேர்ந்த உக்ரைன் இன்டர்நேசனல் எர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் ஈரான் தலைநகர் டெக்ரானில் இருந்து கடந்த புதன்கிழமை கீவ் நகரை நோக்கி புறப்பட்டது.

போயிங் 737 - 800 என்ற ரகத்தை சேர்ந்த அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. விமானத்தில் இருந்த 167 பயணிகள் உள்பட 176 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் 82 பேர் ஈரானைச் சேர்ந்தவர்கள், 63 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள்,11 பேர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தொழில்நுட்ப கோளாறால் ஏற்பட்ட விபத்து என்று முதலில் கூறப்பட்டாலும், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர்பதற்றம் அதிகரித்திருந்த சூழலில் விமானம் விழுந்து நொறுங்கியதால், பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. மேலும், விமானத்தின் கருப்பு பெட்டியை போயிங் நிறுவனத்திற்கு வழங்க முடியாது என்றும் ஈரான் மறுத்து விட்டது.

இந்த நிலையில் தான், தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை தாக்க பயன்படும் ஏவுகணையைக் கொண்டு ஈரான் ராணுவம் அந்த விமானத்தை வீழ்த்தியிருப்பதாக கனடா பகிரங்கமாக குற்றம்சாட்டி இருக்கிறது. அமெரிக்காவும் 
அதே குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டது.

ரஷ்யாவின் தயாரிப்பான டார் எம் 1 என்ற ஏவுகணை மூலம் விமானத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமா என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது.

விமானம் விழுந்த இடத்தில் இருந்த கிடைத்த பாகங்களை கொண்டு, டார் எம் 1 ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதா என்று ஆய்வு செய்து வருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

குறுகிய தூர இலக்கை தாக்கி அழிக்கவல்ல ரஷ்யாவின் டார் எம் 1 ((tor எம்1)) என்ற ஏவுகணையை 2000 ஆண்டு ஈரான் வாங்கியது. அப்போது அந்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்காவும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது.

ரேடார் உதவியுடன் ஏவப்படும் அதிநவீன டார் எம் 1 ஏவுகணை அமைப்பு மூலம் ஒரே நேரத்தில் இரண்டு இலக்குகளை குறி வைத்து 2 ஏவுகணைகளை செலுத்த முடியும். 20 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்தையும், 12 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இலக்கையும் துல்லியமாக தாக்கி அழிக்க முடியும். ஒலியை விட 3 மடங்கு வேகத்தில் ஏவுகணை பாயும் என்பதால், 5 கிலோ மீட்டர் தொலைவை 5 நொடிக்குள் அடைந்து விடும்.

ஒரு முறையை ஏவுகணையை செலுத்தி விட்டால், பின்னர் அதன் திசையை மாற்ற முடியாது என்றும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 15 கிலோ வெடிபொருள் தான் இருக்கும் என்றாலும், தோட்டா போன்று உலோகத்துண்டுகளை அவை வெடித்துச் சிதற வைக்கும். 

ஒருவேளை ஏவுகணை தாக்கியிருந்தால், விமானத்தில் இருந்த விமானியால் எதிர்வினையாற்ற கூட அவகாசமே இருந்திருக்காது என்றும் பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் ஏவுகணை தாக்க வருவதையே அவர்களால் பார்க்க முடியாது என்றும் தெரிவிக்கின்றனர்.

விமானம் விழுந்த இடத்திற்கு அருகே சில கிலோ மீட்டர் தொலைவுகளில் மற்ற பயணிகள் விமானங்களும் அப்போது பறந்துள்ளன. டார் ஏவுகணையை ரேடார் உதவியுடன் தான் ஏவ முடியும் என்பதால், ஏவுகணையைக் கொண்டு தாக்கியிருந்தால் விமானத்தை அடையாளம் கண்டிருக்க முடியும் என்றும் பாதுகாப்பு நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. 

ஆனால், ஏவுகணை மூலம் விமானம் வீழ்த்தப்பட்டது என்ற குற்றச்சாட்டை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தங்கள் மீது குற்றம்சாட்டும் நாடுகள் அதற்கான ஆதாரங்களையும் வெளியிட வேண்டும் என்று ஈரான் வலியுறுத்தி இருக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments