கப்பலூர் சுங்கசாவடியில் சாமிமார்களுக்கு அடி..! தொடரும் அடாவடி
மதுரை கப்பலூர் சுங்கசாவடியில் பாஸ்டேக் வழியாக நுழைந்த வேனுக்கு இருமடங்கு கட்டணம் கேட்டதால் ஏற்பட்ட தகராறில், சுங்கசாவடி ஊழியர்கள் அதில் பயணித்த அய்யப்பசாமி பக்தர்களை சரமாரிய தாக்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
சென்னை பிராட்வே பகுதியில் இருந்து வேன் ஒன்றில் சபரிமலைக்கு சென்று விட்டு மீண்டும் மதுரை நோக்கி ஐயப்ப பக்தர்கள் திரும்பிக் கொண்டிருந்தனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடிக்கு வந்தபோது வாகன நெரிசல் அதிகமாக இருந்ததால் சுங்கச்சாவடி முதல் பாதையில் ஐயப்ப பக்தர்கள் வேன் சென்றது. இதனால் டோல்கேட் ஊழியர்கள் பாஸ்டேக் பாதையில் வந்தால் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என கூறி வாக்குவாதம் செய்தனர்.
உடனே வேனை ஓட்டி வந்த டிரைவர் கோபால் நான் மாற்றுப்பாதையில் செல்கிறேன் என வண்டியை பின்னோக்கி எடுத்துள்ளார். அப்போது டோல்கேட் ஊழியர்கள் கைகளால் ஓங்கி தட்டி உள்ளனர். இதனால் கோபமுற்ற ஐயப்ப பக்தர்கள் டோல்கேட் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகின்றது.
ஜனவரி 15-ஆம் தேதி முதல் தான் பாஸ்டேக் அமலுக்கு வருகிறது. அதற்குள் ஏன் இரு மடங்கு கட்டணம் கேட்கிறீர்கள்? நீங்கள் இந்தியர்கள் தானே என்று ஐயப்ப பக்தர்கள் கேட்க ? ஒரு ஊழியர் இல்லை நான் பாகிஸ்தானில் இருந்து வந்திருக்கிறேன் என ஐயப்ப பக்தர்களை கோபமாக பேசி தாக்கியதாக கூறப்படுகின்றது.
இதனால் இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டதில் டோல்கேட் ஊழியர்கள் அனைவரும் ஐயப்ப பக்தர்களை தாக்கியதில் 3 பேருக்கு மண்டை உடைந்தது ஒருவர் பலத்த காயமடைந்தார். மேலும் ஐயப்ப பக்தர்கள் அணிந்திருந்த மாலையையும் சுங்கசாவடி ஊழியர்கள் அறுத்தெறிந்து இழுத்துச்சென்றனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சியுற்ற ஐயப்ப பக்தர்கள் காயம் அடைந்த 4 பேரையும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துவிட்டு தங்கள் மீது தாக்குதல் நடத்திய டோல்கேட் ஊழியர்களை கைது செய்ய வேண்டும் என கோரி திருமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரிக்க திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசார் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட டோல்கேட் ஊழியர்கள் 4 பேரை கைது செய்து திருமங்கலம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையடுத்து இன்னும் நடைமுறைக்கே வராத கட்டய பாஸ்டேக் முறையை அமல்படுத்தி அடாவடியில் ஈடுபட்ட சுங்கசாவடி நிர்வாகத்தின் மீதும் காவல்துறையினர் கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
அதே நேரத்தில் பொங்கல் பண்டிக்கைக்கு ஊருக்கு செல்லும் வாகன ஓட்டிகளை கட்டாய பாஸ்டேக் சிஸ்டம் இன்னலுக்குள்ளாக்கினால் சுங்கச்சாவடிகளில் கடும் பிரச்சனைகள் ஏற்படும் என்பதை உணர்ந்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தக்க மாற்று வழிமுறைகளை கையாள வேண்டும்.
இல்லையேல் கப்பலூர் சுங்கசாவடியில் நடந்தது போன்ற அராஜக அடாவடிகள், ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் அரங்கேற புதிய பாஸ்டேக் சட்டம் வழிவகுத்து விடும் என்று எச்சரிக்கின்றனர் வாகன உரிமையாளர்கள்..!
Comments