கனடா, அமெரிக்க குற்றச்சாட்டுகளை அடியோடு மறுக்கிறது ஈரான்
உக்ரைனின் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளான சம்பவத்தில், அமெரிக்காவும், கனடாவும் புதிய குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றன. ஆனால், பல தரப்பினரின் குற்றச்சாட்டுகளை, ஈரான் மறுத்திருக்கிறது.
ஈரானால் உக்ரைனின் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தமக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
விமான விபத்தில் உறவுகளை இழந்து துயரத்தில் தவிக்கும் குடும்பங்களுக்கு இந்த தகவல் அதிர்ச்சியளிக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஈரானின் ஏவுகணை மூலம் உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் கனடா பிரதமர் தெரிவித்திருந்தார்.
இதே போன்று விமானத்தை தாக்கும் ஏவுகணை மூலம் இந்த விமானம் தாக்கப்பட்டிருக்கலாம் என்றும் அமெரிக்க ராணுவத்தினர் சந்தேகிக்கின்றனர். இப்பிரச்சினை தொடர்பாக கருத்து தெரிவித்த அதிபர் டிரம்ப், ஏதோ பயங்கரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றார். சிலர் தொழில்நுட்பக் கோளாறு என்று கூறுகின்றனர் என்றும், அது ஒரு பிரச்சினையே அல்ல என்று தாம் கருதுவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். 176 பேர் இருந்த விமானம் தீப்பிடித்து பூமியை நோக்கி சரிந்து விழுந்த போதுதான் உதவிக்கான அழைப்பு வந்தது என்றும் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியானது.
இந்நிலையில், விமான விபத்து தொடர்பாக, நிபந்தனையற்ற ஆதரவு தருமாறு, ஐக்கிய நாடுகள் அவையிடம், உக்ரைன் அரசு கோரியுள்ளது. இதற்கிடையே, தம்மிடம் உள்ள ஆதாரங்களை தங்களோடு பகிர்ந்துகொள்ளலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு, ஈரான் அழைப்பு விடுத்திருக்கிறது. மேலும், விமான விபத்து தொடர்பான விசாரணையில், போயிங் நிறுவனம் விருப்பப்பட்டால், இணைந்து கொள்ளலாம் என்றும் ஈரான் அரசு அதிகாரிகளை மேற்கோள்காட்டி செய்தி நிறுவனம் ஒன்று, தகவல் வெளியிட்டுள்ளது.
Comments