மின்வாரிய ஊழியரின் ஏ.டி.எம். கார்டு நூதன முறையில் திருட்டு
பெரம்பலூரில் மின்வாரிய ஊழியரின் ஏ.டி.எம். கார்டை நூதன முறையில் திருடி 30 ஆயிரம் ரூபாயை எடுத்த நபரை சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.
மின்வாரிய ஊழியரான பாலகிருஷ்ணனின் ஏ.டி.எம். கார்டு மூலம் அவரது மருமகன் பாலமுருகன் பணம் எடுத்த போது அவருக்கு உதவி செய்வது போல வந்த ஒரு நபர், பாலமுருகனிடம் இருந்த ஏ.டி.எம். கார்டை பெற்று, அதற்குப் பதிலாக வேறு ஒரு ஏ.டி.எம். கார்டை மாற்றிக் கொடுக்கும் காட்சிகள் சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளன.
அந்த நபர் பணத்தை எடுக்க முடியவில்லை என்று கூறியதை நம்பி பாலமுருகன் வேறு ஒரு ஏடிஎம் மையத்துக்கு சென்று பணம் எடுக்க முயற்சித்த போது, ஏ.டி.எம். கார்டின் பின் எண்ணே தவறு என எந்திரத்தில் தகவல் வந்தது.
இதையடுத்து கார்டை ஆய்வு செய்த போதுதான் அதில் வேறு பெயர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வங்கியை தொடர்பு கொண்டு ஏ.டி.எம். கார்டை முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கு முன்னதாகவே அந்த மோசடி நபர் 30 ஆயிரம் ரூபாயை கணக்கில் இருந்து எடுத்துவிட்டார். சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் போலீசார் அந்த நபரை தேடி வருகின்றனர்.
Comments