சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை.. 2 பேரின் புகைப்படங்கள் வெளியீடு..!

0 4353

ன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் கொலை செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், அவரது உடலின் 4 இடங்களில் கத்தியால் வெட்டப்பட்ட காயங்களும்,  3 இடங்களில் துப்பாக்கித் தோட்டாக்கள் பாய்ந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  

களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து கேரளா செல்லும் அணுகுசாலையில் இருக்கும் சோதனைச் சாவடியில் நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில் பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் 2 பேரால் கொல்லப்பட்டார்.

அப்பகுதியிலிருக்கும் மசூதி ஒன்றில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்ததில், வில்சனை கொலை செய்த 2 பேர், துப்பாக்கி, கத்தியுடன் மசூதியின் பின்பக்க வாசல் வழியாக ஏறி குதித்து, முன்பக்க வாசல் வழியாக வெளியேறி, கேரளா நோக்கிய சாலையை நோக்கி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு சென்று விசாரணை நடத்தியதில், ஏற்கெனவே நிறுத்தியிருந்த 2 கார்களில் இருவரும் தப்பிச் சென்ற தகவலும் போலீஸாருக்கு கிடைத்தது. இதைத் தொடர்ந்து சிசிடிவி கேமரா காட்சியின் அடிப்படையில், அதிலிருந்த 2 பேரும் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டை சேர்ந்த அப்துல் ஷமீம், நாகர்கோவில் இளங்கடையை சேர்ந்த தவுபீக் என்பதையும் தமிழக காவல்துறை கண்டுபிடித்தது.

இருவரும் கேரளாவுக்கு கார்களில் தப்பிச் சென்றதால், அவர்களின் புகைப்படங்களை அந்த மாநில காவல்துறைக்கு தமிழக காவல்துறை அளித்தது. இதனடிப்படையில், இருவரையும் கண்டுபிடித்து கைது செய்யும் வகையில் களியக்காவிளை -கேரளா சாலையில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை இருமாநில போலீஸாரும் ஆய்வு செய்து வருகின்றனர்.

2 பேரும், என்ஐஏ அமைப்பால் ஏற்கெனவே தேடப்பட்டு வந்தவர்கள் என்பதும் விசாரணையில் புதிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில், நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வில்சனின் உடலை பிரேத பரிசோதனை செய்த 7 பேர் கொண்ட மருத்துவர்கள் குழு அறிக்கை அளித்துள்ளது.

அதில் வில்சனின் முதுகு, வலதுகை விரல், இடதுகை விரல், வலது கால் ஆகிய 4 இடங்களில் கத்தியால் வெட்டப்பட்ட காயங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வில்சனின் கழுத்து, நெஞ்சு பகுதியில் 2 தோட்டாக்கள் பாய்ந்து வெளியேறி இருப்பதாகவும், தொடையில் இருந்த இன்னொரு தோட்டா அகற்றப்பட்டு இருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் எஸ்ஐ வில்சனை கொலை செய்துவிட்டு தப்பியோடிய ஷமீம், தவுபீக் ஆகியோருக்கு உதவியதாக கூறப்படும் 2 பேரை பிடித்து கேரள மாநிலம் பாலக்காடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்கள் 2 பேரும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ள பாலக்காடு போலீஸார், மேற்கொண்டு எந்த விவரத்தையும் வெளியிடவில்லை. இதேபோல், திருவனந்தபுரத்திலுள்ள வளியதுறை பகுதியிலும் ஒருவரை சந்தேகத்தின்பேரில் அந்நகர போலீஸார்  பிடித்து விசாரித்து வருகின்றனர்.

ஆனால் அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது உள்ளிட்ட விவரம் தெரிவிக்கப்படவில்லை. 3 பேரிடம் நடக்கும் விசாரணை குறித்த தகவல் தெரியவந்ததும், பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கு தமிழக க்யூ பிரிவு போலீஸார் தற்போது விரைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments