ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு விநியோகம் தொடங்கியது..
தமிழகம் முழுவதுமுள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பச்சரிசி, சர்க்கரை, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய், கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பும், ஆயிரம் ரூபாயும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து பரிசு தொகுப்பை பெற்று செல்கின்றனர்.
இன்று துவங்கி வரும் 12ம் தேதிக்குள் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12ம் தேதி வரை பரிசுத் தொகுப்பு கிடைக்கப்பெறாதவர்களுக்கு 13ம் தேதியும் வழங்கப்பட உள்ளது.
சென்னை ராயபுரத்தில் நியாய விலைக்கடைக்கே நேரில் சென்ற அமைச்சர் ஜெயக்குமார், பரிசுத் தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஒவ்வொரு நியாயவிலைக் கடையிலும் நாளொன்றுக்கு 300 பேர் வீதம் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட இருப்பதாகவும், காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை கடைகள் திறந்திருக்கும் எனவும் தெரிவித்தார்.
எனவே பொதுமக்கள் நெரிசலை தவிர்த்து, காலை 8 மணி முதல் மாலை 7 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வந்து பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம் என கூறினார்.
சேலம் மாவட்டத்தில் ஆயிரத்து 577 ரேஷன் கடைகளில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. சின்னதிருப்பதி, அஸ்தம்பட்டி, அழகாபுரம், எடப்பாடி, மேட்டூர், கொங்கணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பரிசுத் தொகுப்பையும் ஆயிரம் ரூபாயையும் வாங்கிச் சென்றனர்.
தஞ்சை மாவட்டத்திலுள்ள ஆயிரத்து 185 நியாய விலைக் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சை வடக்கு வீதியிலுள்ள நியாய விலைக் கடைகளில் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து பொங்கல் பரிசுத் தொகுப்பையும், ஆயிரம் ரூபாயையும் வாங்கிச் சென்றனர்.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p
Comments