பாலியல் தொழிலுக்காக கடத்தப்பட்ட சிறுமி - இளைஞன் கைது

0 2777

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே பள்ளிச் சிறுமிகளை காதல் வலையில் வீழ்த்தி வெளிமாநிலங்களுக்குக் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தும் கும்பலில் சிக்கிய சிறுமி மீட்கப்பட்டு, இளைஞன் ஒருவன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.

டிராவல் ஏஜன்சி நடத்தி சிறுமிகளை வெளிமாநிலங்களுக்கு கடத்திச் செல்ல உதவியதாக அவனது தாயை போலீசார் தேடி வருகின்றனர். 

கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அதே பகுதியிலுள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இவரை கடந்த மாதம் 21ஆம் தேதி முதல் காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.

விசாரணை வேட்டையில் இறங்கிய போலீசாருக்கு, புதுப்பட்டினம் ஆர் எம் ஐ நகரைச் சேர்ந்த தனியார் நிறுவன வேன் ஓட்டுநரான கணேஷ் என்பவன் சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது. சிறுமியை காதலிப்பதாகக் கூறி பழகி வந்தவன், திருமணம் செய்துகொள்ளலாம் எனக் கூறி சென்னை அழைத்து வந்தவன், அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்துவிட்டு குஜராத் அழைத்துச் சென்று திருமணம் செய்தது தெரியவந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

ஆல் இந்தியா டிராவல் ஏஜன்சி நடத்தி வரும் கணேஷின் தாய் சுகாசினி, சிறுமிகளை வெளிமாநிலங்களுக்குக் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்த உதவியதாகக் கூறப்படுகிறது.

அவருக்கு குஜராத், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெண்களை வைத்து பிழைப்பு நடதும் எஜண்ட்களோடு தொடர்பு உண்டு என்று கூறப்படுகிறது. கணேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறுமியை மீட்டுள்ள போலீசார், அவனது தாய் சுகாசினியை தேடி வருகின்றனர்.

பதின் பருவத்துக்குள் அடியெடுத்து வைக்கும் பெண் குழந்தைகளோடு நட்பாகப் பழகி, அவர்களது அன்றாட நடவடிக்கைகளை கவனித்து, சரி எது தவறு எது என்பதை பக்குவமாகப் புரியவைக்க வேண்டும் என்பதை பெற்றோருக்கு உணர்த்தும் மற்றொரு சம்பவமாக இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments