சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொலை... இருமாநில எல்லையில் போலீசார் குவிப்பு...!
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் சிறப்பு உதவி ஆய்வாளர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அங்கு இருமாநில போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து கேரளா செல்லும் அணுகுசாலையில் காவல்துறை சோதனைச் சாவடி ஒன்று உள்ளது. இங்கு களியக்காவிளை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் பணியில் இருந்தார். இரவு 9.45 மணியளவில் அங்குள்ள மார்க்கெட் பகுதியிலிருந்து நடந்து வந்த மர்ம நபர்கள் இருவர், திடீரென தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் வில்சனை 4 ரவுண்டுகள் சுட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் 2 தோட்டாக்கள் வெடிக்காமல் போக, மற்ற இரண்டு தோட்டாக்கள் அவரது உடலில் பாய்ந்துள்ளன. இந்த துப்பாக்கிச்சூட்டில் 58 வயதான வில்சன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து இறந்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் வில்சனின் உடலை ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே, டி.ஐ.ஜி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர்.
சம்பவத்தை நேரில் பார்த்ததாகக் கூறப்படும் கல்லூரி மாணவர் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்குள்ள மசூதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் சந்தேகத்துக்கிடமாக இருவர் தப்பியோடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
சம்பவம் நடந்த இடத்தில் இரு மாநில போலீசார் நூற்றுக்கணக்கானோர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தென் மண்டல காவல்துறை தலைவர் சண்முகராஜேஸ்வரன் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக கியூ பிரிவு போலீசார் ஒருபுறம் விசாரணையில் இறங்கியிருக்க, 5 தனிப்படைகளும் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்தக் கொலையில் பழைய ரவுடிகள் அல்லது கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடைபெற்று வருகிறது.
கொலை செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனுக்கு மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். மூத்த மகளுக்குத் திருமணமான நிலையில், மாற்றுத் திறனாளியான 2வது மகள் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இருசக்கர வாகன விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டு மருத்துவ விடுப்பில் இருந்து இந்த மாதம் ஒன்றாம் தேதி முதல் சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். மே மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில் இந்த கோர சம்பவம் அரங்கேறியுள்ளது.
Comments