ஈரான் மீது ராணுவம், ஏவுகணைகளை பயன்படுத்த விரும்பவில்லை என டிரம்ப் பேட்டி...
அமெரிக்கா போரை விரும்பவில்லை என்று அறிவித்துள்ள அதிபர் டிரம்ப், ஈரான் அணு ஆயுதக்குவிப்பை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மற்றும் அல் அசாத் விமானப்படைத் தளம் மீது ஈரான் டஜன் கணக்கில் ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகளால் தாக்குதல் தொடுத்தது. இதில் அமெரிக்க வீரர்கள் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அதிபர் டிரம்ப் ஈரானின் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் சிறிய அளவிலான சேதமே ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.ஈரான் பயங்கரவாத ஆதரவு ராணுவத் தளபதி சுலைமானி நீண்ட காலத்திற்கு முன்பே கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றம் டிரம்ப் தெரிவித்தார்.
ஈரான் மீது மேலும் கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது என்று குற்றம் சாட்டிய அவர், அமெரிக்காவை மிரட்டுவதை ஈரான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் எச்சரித்தார்.
அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தினார். ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கவோ ஏவுகணைகளைப் பயன்படுத்தவோ அமெரிக்கா விரும்பவில்லை என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். .
Comments