பற்களுக்கிடையில் சிக்கிய பாப்கார்ன்.. மரண வாசல் வரை சென்று திரும்பிய தீயணைப்பு வீரர்
பற்களுக்கு இடையில் சிக்கிய பாப்கார்ன் துண்டை எடுக்க செய்த முயற்சிகள், இறுதியில் இதய அறுவை சிகிச்சை வரை சென்று ஒரு நபர் உயிர் பிழைத்துள்ள சம்பவம் பிரிட்டனில் நிகழ்ந்துள்ளது.
பிரிட்டனை சேர்ந்த 41 வயதான தீயணைப்பு வீரர் ஆடம் மார்ட்டின். இவர் சமீபத்தில் பாப்கார்ன் தின்ற போது, அதன் ஒரு சிறிய துண்டு அவரது பல்லின் பின்பக்கம் சென்று சிக்கியுள்ளது. இதனால் அசௌகரியமாக உணர்ந்த அவர், எப்படியாவது பற்களின் இடையில் சிக்கிய பாப்கார்ன் துண்டை எடுத்தே தீருவது என்ற முடிவுடன் கையில் கிடைத்ததை எல்லாம் கொண்டு முயற்சித்துள்ளார்.
சிக்கியிருந்த பாப்கார்னை வெளியிலெடுக்க பேனா மூடி, டூத்பிக், கம்பித் துண்டு மற்றும் உலோக ஆணி உள்ளிட்ட பல கருவிகளை பயன்படுத்தியுள்ளார். இதனால் அவரது ஈறு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பல் வலி இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் இருந்துள்ளார்.
ஓரிரு நாட்களில் இரவில் வியர்த்து கொட்டுவது, தலைவலி, கடும் சோர்வு உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டுள்ளார். ஒருகட்டத்தில் அவருக்கு அதீத மார்பு வலியும் ஏற்பட்டுள்ளது. பின்னர் மருத்துவமனையில் அனுமதித்த அவரை பரிசோதித்த போது, இதயத்தை பாதிக்கும் எண்டோகார்டிடிஸ் தொற்றுநோய் இருந்தது கண்டறியப்பட்டது.
இது பாக்டீரியாவை இரத்த ஓட்டத்தில் பரப்புகிறது. மேலும் இதய அறைகள் மற்றும் வால்வுகளின் உள் புறத்தைத் தாக்குகிறது. பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளார்.
இனி ஒரு போதும் பாப்கார்னை சாப்பிடப் போவதில்லை என்று ஆடம் மார்ட்டின் கூறியுள்ளார். ஆசைப்பட்டு பாப்கார்ன் சாப்பிட்டு, இறுதியில் மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பியுள்ளார் மார்ட்டின் .
Comments