புதுச்சேரியில், கொண்டுவரப்படவுள்ள சூதாட்ட கிளப்பினால் தமிழக இளைஞர்களும் சீரழிவார்கள் - அமைச்சர் ஆவேசம்
புதுச்சேரியில், கொண்டுவரப்படவுள்ள சூதாட்ட கிளப்பினால் அம்மாநில இளைஞர்கள் மட்டுமல்ல தமிழக இளைஞர்களும் சீரழிவார்கள் என சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாக கூறினார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற குழுத்தலைவர் ராமசாமி, தமிழகத்தில் மதுக்கடைகளை குறைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் மொத்தமாக 6674 மதுபான கடைகள் இருந்ததாகவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 500 கடைகளும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி 500 கடைகளையும் மூடிய பின்னர் தற்போது 5500 கடைகள் மட்டுமே இருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்பது தான் அரசின் கொள்கை எனவும், உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் மூலமாக உயிரிழப்பு நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் அமைச்சர் தங்கமணி பேசினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி வி சண்முகம், மாநிலத்திற்கு ஒரு கொள்கையை காங்கிரஸ் வைத்திருப்பதாகவும், புதுச்சேரியில் மதுவிற்பனைக்கு காங்கிரஸ் தடை கோராதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டில் மதுவிலக்கு கோருவது மூலம், புதுச்சேரியில் மதுவிற்பனையை அதிகரித்து அந்த மாநில நிதியை மேம்படுத்த திட்டமிடுகிறாரோ என்ற சந்தேகம் எழுவதாகவும் அமைச்சர் கூறினார்.
மேலும், புதுச்சேரியில் சூதாட்ட கிளப் கொண்டு வர காங்கிரஸ் அரசு முயற்சி எடுத்து வருவதாக குற்றம்சாட்டிய அமைச்சர் சி.வி.சண்முகம், அவ்வாறு வரும்பட்சத்தில் அம்மாநில இளைஞர்கள் மட்டுமல்லாது தமிழக இளைஞர்களும் சீரழிவார்கள் என்பதற்கு ராமசாமி என்ன சொல்ல போகிறார் என ஆவேசமாக பேசினார்.
Comments