ஆர்கானிக் செங்கரும்பு - அசத்தும் விவசாயி
ரசாயன உரம், பூச்சிகொல்லி மருந்து பயன்படுத்தாமல், முழுக்க முழுக்க இயற்கை முறையில், ஆர்கானிக் செங்கரும்பு சாகுபடி செய்து அசத்தி இருக்கிறார் சின்னமனூரைச் சேர்ந்த விவசாயி. வழக்கறிஞரான இவர் இயற்கை முறை விவசாயத்தை சவாலுடன் மேற்கொண்டு நிகழ்த்திய சாதனை பற்றிய செய்தி தொகுப்பு இது.
விவசாயத்தையே பிரதானமாக கொண்ட தேனி மாவட்டத்தில் சின்னமனூர் பகுதியில், நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.
இப்பகுதியில் பெரும்பாலும் ஆலைக்கரும்பு பயிரிடப்பட்டு வரும் நிலையில், குச்சனூரைச்சேர்ந்த விவசாயத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞரான செல்லத்துரை, புதிய முயற்சியாக இயற்கை முறையில் ஆர்கானிக் செங்கரும்பு பயிர் செய்து அசத்தி இருக்கிறார்.
30 சென்ட் நிலத்தில், 4 ஆயிரம் ரூபாய்க்கு 2 ஆயிரம் கரும்பு கரணைகளை வாங்கி பயிரிட்டதில், ஒரு கரணையில் இருந்து 3 முதல் 9 கரும்பு வரை வளர்ந்து சுமார் 9 ஆயிரம் கரும்புகள் வளர்ந்துள்ளன.
பலரும் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தும் நிலையில், சர்க்கரை ஆலையில் இருந்து கிரீன் பிளஸ் என்கிற இயற்கை கம்போஸ்ட் உரம் மற்றும், புண்ணாக்கு, எருக்கஞ் செடி இலைகளை போட்டு தயாரிக்கப்பட்ட இயற்கை உரம் ஆகியவற்றை இட்டு வளர்க்க 10 மாதங்களில் சுவையான இயற்கை செங்கரும்பு அறுவடைக்கு தயாராகிறது.
இயற்கை முறையில் கரும்பு வளர்ப்பு சவாலானது என்றாலும், அது தொடர்பான நூல்களில் இருந்தும், வேளாண் அதிகாரிகள் ஆலோசனைப்படி பயிரிட்டு உரமிட்டபின்பு, காலை மாலையில் தண்ணீர் விட்டு, 3 மாதத்தில் தோகையை உரித்துவிடுவதுதான் வேலை என்கிறார், செல்லத்துரை
இதுபோக, தென்னையில் ஐந்தடுக்கு முறையில் மரக்கன்றுகள் நட்டு வளர்த்து வருகிறார். மேலும் பலா, கிராம்பு, ஈட்டி, எலுமிச்சை மரங்களையும், நெல் பயிர்களையும் இயற்கை முறையில் பயிரிட்டு, விவசாயிகள் மத்தியில் முன்னோடியாக திகழ்கிறார்.
Comments