ஈராக்கில் அமெரிக்கப் படைகள் மீது ராக்கெட் மூலம் தாக்குதல் தொடுத்த ஈரான்

0 1720

ஈராக்கிலுள்ள அமெரிக்காவின்  2 ராணுவ தளங்கள் மீது ஈரான் இன்று அதிகாலை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியிருப்பதால், இரு நாடுகளிடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காஸிம் சுலைமானி கொல்லப்பட்டார். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுலைமானியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட சில மணி நேரத்தில், ஈராக்கில் அமெரிக்க வீரர்கள் தங்கியுள்ள 2 நிலைகள் மீது இன்று அதிகாலை 10க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஈரானின் புரட்சிகர படையினர் வீசி தாக்குதல் நடத்தினர்.

அதில் ஒரு தளம், கடந்த 2018ஆம் ஆண்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை புரிந்த அல் அசாத் விமான தளமாகும். இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்பு, சேத விவரம் குறித்து தகவல் இல்லை. அதேநேரத்தில் ஈரானிலிருந்து ஈராக் நோக்கி ஏவுகணைகள் வீசப்படும் காட்சியை அந்நாட்டு அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது.

ஈரான் ஏவுகணை தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பேயோ, பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் (Mike Pompeo and Defense Secretary Mark Esper) ஆகியோர் வெள்ளை மாளிகைக்கு உடனடியாக விரைந்தனர்.

நிலவரம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பிடம் எடுத்துரைக்கப்பட்டு உள்ளதாகவும், நிலவரத்தை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஏவுகணை தாக்குதலை அடுத்து, ஈராக், ஈரான் வான் பகுதியில் தங்கள் நாட்டு பயணிகள் விமானங்கள் பறப்பதற்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. ஈராக்கிலுள்ள 2 அமெரிக்க தளங்கள் மீது ஈரான் இன்று அதிகாலை ஏவுகணைகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தியது.

இதையடுத்து ஈரானுடன் முழு அளவில் போர் மூளும் அபாயம் உள்ளதால், ஈராக், ஈரான், ஓமன் வளைகுடா, சவூதி அரேபியா மற்றும் ஈரான் இடையேயான பகுதி ஆகியவற்றில் பயணிகள் விமானங்கள் பறப்பதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

ஏவுகணை தாக்குதலை உறுதி செய்து ட்விட்டரில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட பதிவுகளில், "ஆல் இஸ் வெல்" என்று குறிப்பிட்டுள்ளார். உலகிலேயே அமெரிக்காவிடம்தான் அதிக சக்திவாய்ந்த ராணுவ தளவாடங்கள் இருப்பதாக கூறியுள்ள டிரம்ப், நாளை காலை இதுகுறித்து அறிவிப்பு வெளியிட போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, போர் பதற்றத்தை சுட்டிக்காட்டி, ஈரான், ஈராக் மற்றும் அரேபிய வளைகுடா வான் பகுதி வழியே விமானங்களை இயக்க வேண்டாம் என்று இந்தியாவை சேர்ந்த விமான நிறுவனங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள எச்சரிக்கையில், ஈராக்கில் நிலவும் பதற்றத்தை கருத்தில் கொண்டு, அடுத்தக்கட்ட அறிவிப்பு அரசால் வெளியிடப்படும் வரையில்,  மிகவும் அத்தியாவசியம் ஏற்பட்டால் தவிர அந்நாடுகளுக்கு பயணிக்க வேண்டாம் என இந்தியர்கள் அறிவுறுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. ஈராக்கில் வசிக்கும் இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், வசிப்பிடத்தை விட்டு வெளியேறி பிரயாணம் செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாக்தாத்திலுள்ள இந்திய தூதரகமும், எர்பிலில் உள்ள இந்திய துணை தூதரகமும் வழக்கம் போல செயல்படும் எனவும், ஈராக்கிலுள்ள இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை தூதரகங்கள் செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments