நிர்பயா கொலை வழக்கில் ஜன.22 ஆம் தேதி தூக்கு தண்டனை

0 2259

நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 22-ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மருத்துவ மாணவி நிர்பயாவை கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 6 பேர் அவரை இரும்புக் கம்பியைக் கொண்டு சித்திரவதை செய்ததோடு ஓடும் பேருந்தில் இருந்து சாலையோரம் வீசிவிட்டுச் சென்றனர். அந்த 6 பேரில் சம்பவம் நடைபெறும்போது சிறுவனாக இருந்த ஒருவன் 3 ஆண்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பின்னர் விடுவிக்கப்பட்டான். மற்றொரு குற்றவாளியான ராம்சிங் சிறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டான்.

இந்நிலையில் எஞ்சிய குற்றவாளிகளான பவன் குப்தா, முகேஷ், வினய் சர்மா, அக் ஷய் குமார் ஆகியோருக்கு ஏற்கனவே உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்த நிலையில் அவர்கள் அனைவரும் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு அவர்களின் துக்குத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்திருந்தது.

இந்நிலையில் 4 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான உத்தரவை பிறப்பிக்கக் கோரி நிர்பயாவின் பெற்றோர் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கில் 4 பேருக்கும் வரும் 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நீதிபதி உத்தரவிட்டார்.

குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் விரைவில் தொடங்குவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்பயாவின் தாயார்,தனது மகளுக்கு நியாயம் கிடைத்துவிட்டதாகத் தெரிவித்தார்.

4 குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவதன் மூலம் நாட்டில் பெண்களின் அதிகாரம் உறுதிப்படுத்தப்படும் என்றும், மக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கை வலுப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments