எஸ்கலேட்டரில் சிறுவனின் தலை சிக்கியதால் பரபரப்பு
சென்னை சரவணா ஸ்டோர் எஸ்கலேட்டரில் 13 வயதுச் சிறுவனின் தலை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை கன்னிகாபுரத்தைச் சேர்ந்த சசிகலா என்பவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணி எடுப்பதற்காக நேற்று மாலை தனது மகன் ரணீஷ் பாபுவுடன் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோருக்குச் சென்றார்.
கடையின் 8-வது மாடிக்கு இருவரும் எஸ்கலேட்டரில் சென்ற நிலையில் சிறுவன் ரணீஷ்பாபு எஸ்கலேட்டரின் நகரும் கைப்பிடியின் மீது தலையைச் சாய்த்தவாறு கீழ்த்தளத்தை வேடிக்கை பார்த்தவாறே சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் எஸ்கலேட்டர் 8-வது தளத்தில் சென்று சேரும் இடத்தில் உள்ள நிலையான சுவருக்கும், எஸ்கலேட்டரின் நகரும் கைப்பிடிக்கும் இடையே உள்ள சிறு இடைவெளியில் சிறுவனின் தலை சிக்கிக் கொண்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஊழியர்கள் உள்ளிட்டோர் எஸ்கலேட்டரின் மின் இணைப்பை நிறுத்தி உடனடியாக சிறுவனை மீட்டனர். எனினும் ரணீஷ்பாபுவின் தலையில் காயம் ஏற்பட்டதையடுத்து சசிகலா தனது மகனை ஸ்டான்லின் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
இது தொடர்பான சசிகலாவின் புகாரின் பேரில் போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Comments