பெட்ரோல் பங்கில் திருட்டு பயல் வைத்த கேமரா..! அதிர்ச்சியில் கோவை

0 2360

கோயம்புத்தூரில், ரூட்ஸ் நிறுவன பெட்ரோல் பங்கில், பெண் ஊழியர்கள் உடைமாற்றுவதை செல்போன் காமிராவை மறைத்து வைத்து வீடியோ எடுத்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கோயம்புத்தூரில், ரூட்ஸ் என்ற பிரபல நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் பெட்ரோல் பங்க், சாய்பாபா காலனி அருகே உள்ளது. இங்கு பணியாற்றும், பெண் ஊழியர்கள் உடைமாற்றுவது, செல்போனில் ரகசியமாக படம்பிடிக்கப்பட்ட வீடியோ, வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது...

இந்நிலையில், இந்த பெட்ரோல் பங்கில், வேலைபார்த்த கோயம்புத்தூர் கண்ணப்ப நகரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர், ரூட்ஸ் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் தன்னை தாக்கியதாக கூறி, கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்..

தன்னை பழிவாங்கும் நோக்கில், நிறுவன அதிகாரிகளே, பெட்ரோல் திருடச் சொல்லி, அதனை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, தன்னை தாக்கியதாகவும், சாய்பாபா காலனி காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும், மணிகண்டன் தெரிவித்துள்ளார். ஆனால், இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகின்றது.

ரூட்ஸ் நிறுவன பெட்ரோல் பங்க், பெண் ஊழியர்கள் உடைமாற்றும் வீடியோ வெளியான விவகாரத்திலேயே, மணிகண்டன் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தான் பெட்ரோல் திருடியதாக கூறி பணியிலிருந்து நீக்கப்பட்ட ஆத்திரத்திலேயே, பல மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோவை, மணிகண்டன் பரப்பியதாக சொல்லப்படுகிறது.. இதனால் எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் தான், ரூட்ஸ் நிறுவன அதிகாரிகள், ஊழியர்களால் மணிகண்டன் செமத்தியாக கவனிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது...

இதுபற்றி விசாரித்தபோது, பெண் ஊழியர்கள் உடைமாற்றும் வீடியோவை எடுத்தது தாம் அல்ல என்றும், சுபாஷ் என்ற முன்னாள் ஊழியர் தான் எடுத்ததாக மணிகண்டன் கூறியுள்ளான்..

4 மாதங்களுக்கு முன்பு, பணியிலிருந்து நீக்கப்பட்ட சுபாஷ், பெண்கள் உடைமாற்றும் அறைக்குள் சென்று, செல்போனை மறைத்து வைத்து இந்த வீடியோவை எடுத்ததாகவும், இதற்கு பெண் ஊழியர் ஒருவர் உடந்தை என்றும் கூறப்படுகின்றது.

அதிரவைக்கும் இந்த வீடியோ பதிவு பற்றி, பெண் ஒருவர் நிர்வாகத்தில் அளித்த புகாரின் பேரில் தான், சுபாஷ் பணியிலிருந்து நீக்கப்பட்டான் என்றும், அப்போது, அந்த வீடியோவை பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் ஒப்படைத்துவிட்டு, டெலிட் செய்துவிட்டான் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், எப்படியோ, அந்த வீடியோ மணிகண்டன் தரப்புக்குச் சென்ற நிலையில், வைரலானதாகவும், அதன்பின்னரே, அந்த நபர் அடிஉதைக்கு ஆளானதாகவும், சொல்லப்படுகிறது.

பெண்களின் தன்மானத்திற்கும், அவர்களின் பாதுகாப்புக்கும் சவால் விடும் வகையில் வீடியோ எடுத்த சுபாஷ் எங்கே....?, அதற்கு உதவியதாக கூறப்படும் பெண் ஊழியர் யார்..?, மணிகண்டன் பொய் புகார் அளித்தாரா..? ஏன் இன்னும் சாய்பாபா காலனி போலீசார் விசாரிக்கவில்லை, வழக்குப்பதிவு செய்யவில்லை என்பது, கேள்விக்குறியாக மாறியிருக்கிறது...

பெண் ஊழியர்கள் உடைமாற்றும் அறையின் சூப்பர்வைசராக, பெண்கள் நியமிக்கப்படுவது தான், நடைமுறை. ஆனால், கோயம்புத்தூர் ரூட்ஸ் பெட்ரோல் பங்கில், அது தலைகீழாக நடைபெற்று, ஆண் நபரான சுபாஷ் எப்படி நியமிக்கப்பட்டிருந்தார் என்பது மில்லியன் டாலர் கேள்வி.

அல்லது, இதை கண்காணிக்க வேண்டிய காவல்துறையினர், பெட்ரோல் பங்க் அனுமதி அளிக்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தார் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனத்தார் ஏன் ஆய்வு செய்யவில்லை என்பது, கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments