JNU தாக்குதல் சம்பவம் - ஹிந்து ரக் ஷா தளம் அமைப்பு பொறுப்பேற்பு
டெல்லி ஜவஹர்லால் நேரு (JNU) பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஹிந்து ரக் ஷாதளம் (hindu raksha dal) அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் கடந்த 5-ம் தேதி நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டத்தில் முகமூடி அணிந்து இரும்பு கம்பிகள், ஹாக்கி மட்டைகள், உருட்டுக் கட்டைகளுடன் வந்து கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பொறுப்பேற்று ட்விட்டரில் ஹிந்து ரக் ஷா தள அமைப்பின் தலைவரான பூபேந்திர தோமர் என்ற பிங்கி செளதரி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சுமார் 1 நிமிடம் 59 நொடிகள் ஓடுகிறது.
அதில் அவர், ஜேஎன்யூ-வில் தேசவிரோத, ஹிந்து விரோத நடவடிக்கைகள் நடைபெற்றதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒப்பு கொண்டுள்ளார். கம்யூனிஸ்டுகளின் மையமாக ஜே.என்.யூ இருக்கிறது. இதுபோன்ற மையங்களை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.
அவர்கள் எங்களையும், நாட்டையும் தூற்றுகிறார்கள். எங்கள் மதம் குறித்த அவர்களின் அணுகுமுறை தேச விரோதமானது. தேசவிரோத சக்திகளாக உள்ளவர்கள் நம் நாட்டிலேயே வாழ்ந்து கொண்டு, இங்கே சாப்பிட்டு கொண்டு, கல்வியையும் பெற்று கொள்கிறார்கள்.
பின்னர் தேசத்தின் நலனுக்கு எதிராக தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். ஜே.என்.யூ வளாகத்தில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களே. நாட்டிற்காக எங்கள் வாழ்க்கையை தியாகம் செய்ய நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.
எதிர்காலத்தில் வேறு எந்த பல்கலைக்கழகங்களிலும் யாராவது தேச விரோத செயல்களில் ஈடுபட முயன்றால், அங்கும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ குறித்து டெல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments