சாதிய காதலை சாடுகிறதா திரெளபதி..? சினிமாவில் சாதி சண்டை

0 4956

மிழகத்தில் விரைவில் வெளியாக உள்ள திரவுபதி என்ற படத்தின் முன்னோட்ட காட்சியில், சாதிகடந்து காதல் திருமணம் செய்து வைக்கும் தலைவர்களை கடுமையாக விமர்சித்து இருப்பதால் படத்தை தடை செய்ய வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கு.ராமகிருஷ்ணன் புகார் கூறி உள்ளார்.

பாரதிராஜாவின் வேதம் புதிது.. பாக்யராஜின் இது நம்ம ஆளு .. கமல்ஹாசனின் சண்டியர்.... விஸ்வரூபம்.. ரஞ்சித்தின் கபாலி ... முத்தையாவின் கொம்பன் .... மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் வரிசையில் மோகன் ஜி என்ற இளம் இயக்குனரின் திரவுபதி என்ற படைப்பு வெளியாவதற்கு முன்னதாகவே பெரும் எதிர்பார்ப்பையும், பலத்த எதிர்ப்புகளையும் சந்திக்க தொடங்கி இருக்கிறது..!

சாதி கடந்து காதல் செய்ய சில தலைவர்கள் தூண்டுவதாக, படத்தின் முன்னோட்டக் காட்சியில் இடம் பெற்றுள்ள வசனமே படம் யாரை தாக்குகிறது என்பதை அடையாளப் படுத்துவதாக அமைந்துள்ளது என ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

காதலித்து வீட்டை விட்டுச் செல்லும் பெண்களை வீடியோ எடுத்து கொடுமைப் படுத்துவதாக ஒரு காட்சி உள்ளது.

காதலனை கொலை செய்து தண்டவாளத்தில் வீசி பழியை எதிர்தரப்பு மீது போட்டு விடுவார்கள் என வாக்குமூலம் அளிப்பதாக ஒரு காட்சி படத்தில் இடம் பெற்றுள்ளது.

காதல் திருமணம் செய்து கொண்ட ஒரு பெண்ணை வைத்து பேரம் பேசும் காட்சியும் அதற்கு எதிர் தரப்பு பஞ்சாயத்தை கூட்டி வெட்டுத் தீர்மானம் நிறைவேற்றும் காட்சியும் இடம் பெற்றுள்ளன.

திரவுபதி படத்தின் முன்னோட்ட காட்சியில் கதை விழுப்புரத்தில் நடப்பதாக கூறப்படுவதால் ஒரு தரப்பு ரசிகர்களிடம் கடும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டுள்ளது. பலரும் ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில் சாதி மறுப்பு திருமணத்தையும், அதற்கு துணை நிற்பவர்களையும் கடுமையாக சாடி இருப்பதால், படம் வெளியானால் தமிழகத்தில் வன்முறை நிகழும் என்றும் அதனால் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் கு.ராமகிருஷ்ணன் புகார் தெரிவித்துள்ளார்.

முதலாவதாக உடுமலை சங்கரை சாதி கடந்து திருமணம் செய்து கொண்ட கவுசல்யாவிற்கு, ஏற்கனவே ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றிய குற்றச்சாட்டுக்குள்ளான பறையிசை கலைஞர் சக்தியை 2ஆவதாக சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்தவர்களில் கு.ராமகிருஷ்ணனும் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது.

அதே நேரத்தில் தற்போது திண்டிவனத்தில் இருப்பதாக தெரிவித்த படத்தின் இயக்குனர் மோகன் ஜி விரைவில் சென்னை திரும்பி திரவுபதி படம் தொடர்பாக விளக்கம் தருவதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments