டிரம்புடன் பிரதமர் மோடி பேச்சு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இரு நாட்டு உறவுகள் மேலும் வலுப்பெற்று வருவதாக, பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார்.
ஈராக்கில், பாக்தாத் விமான நிலையம் அருகே கடந்த வெள்ளிக்கிழமையன்று, அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், ஈரான் ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால், அமெரிக்க-ஈரான் இடையே நீடித்து வந்த பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்பை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாக, இந்திய பிரதமர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, பரஸ்பர மரியாதை, நம்பிக்கை, புரிந்துணர்வு ஆகியனவற்றால் அமெரிக்கா - இந்திய இடையேயான உறவுகள் மேலும் வலுப்பெற்று வருவதாக பிரதமர் மோடி குறிப்பிட்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க மக்களுக்கும், அதிபர் டொனால்ட் டிரம்பிற்கும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் பிரதமர் மோடி தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. அப்போது, இந்தியாவுடனான நல்லுறவை மேம்படுத்த தயாராக உள்ளதாக டிரம்பும், பிரதமர் மோடியிடம் உறுதியளித்திருப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தாண்டில், இந்திய மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று, வளர்ச்சியடைய, அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்துத் தெரிவித்ததாக, பிரதமர் மோடியின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஈரான் ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி கொல்லப்பட்ட விவகாரம் குறித்து, பல்வேறு நாடுகளிடம் அமெரிக்க விளக்கம் அளித்து வரும் நிலையில், டிரம்ப்-மோடி இடையேயான பேச்சில், அது இடம்பெற்றதா? என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
Comments