ஈராக்கில் இருந்து வெளியேற அமெரிக்க படைகள் முடிவு..? ராணுவத் தளபதியின் ரகசியக் கடிதத்தால் பரபரப்பு...

0 2431

ராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் பேச்சுக்கே இடமில்லை என டிரம்ப் அறிவித்திருந்த நிலையில், அந்நாட்டின் இறையாண்மையைக் கருத்தில் கொண்டு அமெரிக்கப் படைகள் வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஈரான் ராணுவத் தளபதி குவாஸிம் சுலைமானி ஈராக்கில் குண்டு வீசிக் கொல்லப்பட்ட பின்னர், வளைகுடா பகுதியில் பதற்றம் நிலவி வந்தது. அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த நினைத்தால், ஈரானின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் குண்டு வீசி அழிக்கப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர், சட்டத்திற்கு உட்பட்டே தங்களுடைய தாக்குதல் இருக்கும் என்று குறிப்பிட்டார். ஈரானிய கலாச்சாரத்தை மதிப்பதாகவும், பிற நாட்டு கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தாக்குதல் நடத்துவது தங்களின் நோக்கமல்ல என்றும் அவர் கூறினார்.

அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என ஈராக் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்த டிரம்ப், பல பில்லியன் டாலர் செலவில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டிருப்பதாகவும், அதனைத் திருப்பித் தந்தால் மட்டுமே ஈராக்கில் இருந்து வெளியேற முடியும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேற தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக ஈராக்கில் இருக்கும் அமெரிக்கப்படைகளின் ராணுவத் தளபதி ஈராக் தளபதிக்கு அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் வெளியாகி உள்ளது.

அந்தக் கடிதத்தில், ஈராக்கின் இறையாண்மையை தாங்கள் மதிப்பதாகவும், அந்நாடு எடுத்திருக்கும் முடிவுக்கு தாங்கள் கட்டுப்பட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாகவும் அமெரிக்க படைத்தளபதி எழுதியதாகக் கூறப்படுகிறது.

இந்த கடிதத்தின் நம்பகத்தன்மையை அறிய முயற்சிப்பதாகவும், ஈராக்கில் இருந்து வெளியேறும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments