பாடுபட்டு விளைவித்த நெல் - பாதுகாக்க இடமின்றி தவிக்கும் விவசாயிகள்..!
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல் வரத்து அதிகரித்துள்ளதால் விலை கடுமையாக சரிந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், பாடுபட்டு விளைவித்த நெல்லை பாதுகாப்பாக வைக்கக் கூட இடமின்றி தவித்து வருவதாக விவசாயிகள் புகார் கூறியுள்ளனர்.
செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வந்து குவிந்திருக்கும் நெல் மூட்டைகள்தான் இவை. கடந்த சில ஆண்டுகளாகவே போதிய மழையின்றி விளைச்சல் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டில் தேவையான மழை பெய்து விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்தது.
அதன் காரணமாக நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது.செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கடந்த சில வாரங்களாகவே ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகளை விவசாயிகள் கொண்டு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அங்கு இடப் பற்றாக்குறை ஏற்படவே, எம்ஜிஆர் நகரில் உள்ள மைதானத்தில் நெல் மூட்டைகள் வைக்க மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் மழை பெய்யும் பட்சத்தில் அந்த மூட்டைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறும் விவசாயிகள், அவற்றை கொள்முதல் செய்யவும் நீண்ட நாட்கள் ஆவதாகக் கூறுகின்றனர். இதனால் வீடுகளுக்குச் செல்ல முடியாமல் வாரக் கணக்கில் நெல் மூட்டைகளுக்கு அருகிலேயே இருந்து பாதுகாத்து வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க நல்ல விளைச்சலைக் கொடுத்த மழை, அறுவடை நேரத்தில் பெய்து நெல்லின் தரத்தையும் குறைத்துவிட்டதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். அதனால் கடந்த ஆண்டு ஆயிரத்து 900 ரூபாய்க்கு விலை போன ஒரு மூட்டை நெல், இந்த ஆண்டு ஆயிரத்து 300க்கும் குறைவாகவே விலை போவதாகவும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இடப்பற்றாக்குறை குறித்து செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் கேட்டபோது, 15 ஆயிரம் மூட்டைகள் வரை மட்டுமே தங்களது விற்பனைக் கூடத்தில் கையாள முடியும் என்றும் அருகிலுள்ள வளத்தி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு நெல் மூட்டைகளை எடுத்துச் செல்லுமாறு விவசாயிகளிடம் அறிவுறுத்தியுள்ளதாகவும் கூறினார்.
கடன் வாங்கி பயிர் செய்து, அரும்பாடுபட்டு விளைவித்து, அறுவடை செய்து கொண்டுவந்து, வாரக்கணக்கில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வைத்து பாதுகாத்து விற்பனைக்கு கொடுத்தால், போதிய விலை கிடைக்காமல் போவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
எனவே நெல் மூட்டைகளுக்கு போதிய விலை கிடைக்கவும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் போதிய வசதிகளை ஏற்படுத்தித் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
Watch Polimer News Online at https://bit.ly/2Qrv39p
Comments